மாற்றம் - சிறுகதை

கோட்டூர்புரம் பஸ் ஸ்டாண்ட், மணி காலை 7.20. சென்ட்ரலில் இருந்து வண்டி 8.15க்கு பயணச்சீட்டு பதிவு செய்திருந்தேன். புதன்கிழமை போக்குவரத்து காலையிலேயே அதிகமாகத் தொடங்கியிருந்தது. சீக்கிரம் கிளம்பியிருந்தால் பேருந்திலேயே போயிருக்கலாம். இனி ஆட்டோவில் போனால்தான் ரயிலைப் பிடிக்க முடியும்.


ஒரு ஆட்டோ வந்தது. சென்ட்ரல் வர்றீங்களா என்றேன். என்ன சார் குடுப்பீங்க என்று கேட்டார். ஏம்ப்பா, மீட்டர் இல்லையா? என்றேன். மீட்டர் ரிப்பேர் சார் இருநூறு ரூபாய் குடுங்க என்றார். நான் நேரக் குறைவை மனதில் வைத்து 150 ரூவா தர்றேன் என்றேன். விலைவாசி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே இப்படி பேசுகீறங்களே? என்று முணுமுணுத்தவாறு வண்டியை கிளப்பினார்.


எல்.ஐ.சி. அருகில் டிராபிக் போலீஸார் வண்டியை நிறுத்தினர்கள். என்னய்யா, மீட்டர் போடாம வண்டியை ஓட்டுற? லைசென்ஸ் எடு! போலீஸ்காரரின் குரல் கம்பீரமாக ஒலித்தது. சார் மீட்டர்... என்று ஓட்டுனர் ஏதோ சொல்ல, யோவ் என்னய்யா முணுமுணுக்கிறே? பேப்பரை எடுய்யா! என்று மிரட்டினார். மணி 7.50. எனக்கு அவசரம். வண்டியிலிருந்து இறங்கி கொஞ்சம் தயக்கத்தோடு ஆய்வாளரை அனுகினேன்.


சார் இவர் எங்க ஏரியாக்காரர். நான் சிட்டி கல்லூரியில் கணித விரிவுரையாளராக இருக்கிறேன்! இவருடைய மகனுக்கு எங்கள் கல்லூரியில் பட்டப்படிப்புக்கு இடம் கிடைக்க உதவி செய்தேன். அதிலிருந்து இவர் என் நண்பராகிவிட்டார். நான் எவ்வளவு வற்புறுத்தினாலும் காசு வாங்குவதில்லை. அதுதான் மீட்டர் போடவில்லை. எனக்கு 8.15க்கு சென்ட்ரலில் வண்டியைப் பிடிக்கவேண்டும் என்றேன். சரி போங்க! இன்ஸ்பெக்டர் முகத்தில் மாற்றம் தெரிந்தது. ஆட்டோ சென்ட்ரலில் நின்றது.


ஓட்டுனர் என் இரண்டு கைகளையும் இறுகப் பிடித்துக் கொண்டு, என்னை மன்னிச்சுடுங்க சார்! உங்க பெருந்தன்மையாலே என்னை வெட்கப்பட வைச்சுட்டீங்க! இனிமேல் சத்தியமா நான் மீட்டருக்கு மேல காசு வாங்க மாட்டேன் என்றவர் எண்பது ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டார்.

கதை: குமுதம்.

எழுதியவர் : : குமுதம். (4-Aug-15, 8:10 pm)
பார்வை : 422

மேலே