சரித்திரமாகும் இலட்சியங்கள் - உதயா

ஊர் ஊராக
சுற்றி திரிந்த
கதிரவனும்
பாரெங்கும்
மெல்லிசையோடு
பாடி திரிந்த வருணனும்
ஓய்வெடுக்க
ஓலை குடிசையின்
கூரைகள் அனைத்தும்
நுழைவு வாயிலாகின
சாணப் போர்வையை
போர்த்திக் கொண்ட
மண் தரையாவும்
மெத்தையாகின
அந்த மழைக் காலங்களில்
முழுப் பொழுதும்
உழைத்து உழைத்து களைத்துப் போன
கணவனும் மனைவியும்
அடிக்கடி வருகை தரும்
பாம்புகளுக்கும் தவளைகளுக்கும்
காலனாகி துயிலுக்கு
விடுதலை அளித்துக் கொண்டிருந்தனர்
வீடு முழுவதும்
மழை நீர் சொட்ட சொட்ட
அந்த பிஞ்சுக் குழந்தையை
புடவை ஊஞ்சலில் தாலாட்டியவாறே
அவனும் அவளும்
மண்ணெண்ணெய் விளக்கின் தயவினில்
படித்துக் கொண்டிருக்க
எத்தனையோ நபர்களுக்கு
மாளிகை கட்டும் தொழிலினை செய்தும்
இன்னும் தன் வீடு
மாளிகையாகவில்லையே என்று
அந்த அப்பாவும் அம்மாவும்
மனக் குமுறலோடு சிந்தும்
ஒவ்வொரு மௌனக் கண்ணீரிலும்
அவனின் இலட்சியமும்
அவளின் இலட்சியமும்
சரித்திரமாக மாறிக் கொண்டேயிருக்கிறது