நான் வெட்கமில்லாதவன்
நான் வெட்கமில்லாதவன்
மதக்ககலவரங்களில்
மனிதர்கள் மடிவதை
மௌனமாகவே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
சாதிச் சண்டைகளில்
சகமனிதர்கள் செத்துபோவதை
சத்தமில்லாமல்
சகித்துக் கொண்டிருக்கிறேன்
தீவரவாத்தால்
துண்டிக்கப்படும் தலைகளை
தாண்டிச் சென்றுவிடுகிறேன்
அரசியல்
துரோகக் கொலைகளை
தூரத்தில் நின்று
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
பெண்கள் மீதான
பாலியல் பலாத்காரத்தில்
புண்ணான மனதை
யாரிடமும்
பகிர்ந்துக் கொள்வதில்லை
குழந்தைகள் மீதான
வன்கொடுமைக் கண்டு
குமுறும் நெஞ்சை
அமைதியாக்கி
அமர்ந்துக் கொண்டிருக்கிறேன்
உறவுகளுக்காக உணர்வுகளுக்காக
பணத்திற்காக பதவிக்காக
மண்ணிற்காக பெண்ணிற்கான
செய்யப்பட்ட கொலைகளை
கண்டும் காணாமல்
இருந்துக் கொண்டிருக்கிறேன்
தியாகிகள் பந்தாடப்படுவதையும்
நல்லவர்கள் நசுக்கப்படுவதையும்
பார்த்தும் பேசாமல்
நகர்ந்து விடுகிறேன்
அனாதை விடுதிகளையும்
முதியோர் இல்லங்களையும்
கனத்த மனதுடன்
கடந்து சென்றுவடுகிறேன்
உயிரிலும் உடலிலும்
அநீதியையும் அக்கிரமங்களையும்
கலந்து மனிதமற்று வாழும்
மனிதர்கள் மத்தியில்
என் தவறுகளையும்
சுமந்துகொண்டு வாழும்
நான் வெட்கமில்லாதவன்

