வரவேற்பு

இயற்கை சொல்லும்
இது முதுவேனில் காலமென்று..
நான் உணர்வேன்
இது நம் வசந்த காலமென்று...

வசந்த கால வாயிலில் நின்று
வரவேற்கும் சாரல் போல
வரவேற்கிறேன் உங்களை என் கவிதை கொண்டு...

இங்கு
கிராமத்து மல்லிகைகளும்
நகரத்து ரோஜாக்களும்
ஒன்றாய் பழகும் அழகைக்கண்டு
வாடிவிடும் ஜாதிமல்லிக் கன்று..

மனனம் செய்து
மதிப்பெண் பெற்றதெல்லாம்
பள்ளியோடு போகட்டும்...

இங்கு
பாடத்தினை நாமே
பல ஆய்வுகள் செய்வோம்
அறிவு வளரட்டும்....

சலனமிகு வயது இது...

சஞ்சலங்கள் படும் மனதை
சங்கிலியால் கட்டிவிடு...

இன்னும் உன் மூளை உறங்கிக்கிடந்தால்
சாட்டை எடு
தட்டி விடு..

உன் தாயின் தாலியும்
தந்தையின் தலையும்
எங்கோ அடகிருக்கலாம்
உன்னை மீட்பதற்கு...
உனக்கும் கல்வியறிவினை கொடுப்பதற்கு...

நற்கனவுகள் காண் என்றவன்
காற்றோடு கலந்திட்டான்...
அவன் கனவுகளை நனவாக்க
நம்மையே தேர்ந்தெடுத்தான்
நினைவில் கொள்...
நம்மை ஏன் தேர்ந்தெடுத்தான்?
உணர்ந்து கொள்...

இன்று திறப்பது
கல்லூரியின் வாசல் மட்டுமல்ல
உன் கனவுகளின் வாசலும்...

அடியே தோழி....
அடுப்படிக்கு வாக்கப்படுவதும்
நல்லதிகாரியென வாழ்த்தப்படுவதும்
இனி உன் கையில்.......

(என் தங்கை அவளது கல்லூரி முதலாமாண்டு மாணவர்களை வரவேற்க நான் எழுதிக்கொடுத்த வரிகள்)

எழுதியவர் : மு.ஜெகன். (8-Aug-15, 5:35 pm)
சேர்த்தது : ஜெகன்
Tanglish : varaverpu
பார்வை : 20544

மேலே