மாண்புமிகு ஜீவன்கள்- சந்தோஷ்
அன்று
கோட்சே சுட்டுக்கொன்றான்
இன்று
டாஸ்மாக் வாடிக்கையாளர்கள்
குடித்துக்கொல்கிறார்கள்...!
வேறு யாரை..?
தேசப்பிதா காந்தியைத்தான்..!
***
ஈழத்தேசத்தின்
இனப்படுகொலைக்கு பின்
பதுங்குக்குழிகளில்
தமிழர் பிணங்களுக்கு பதிலாக
இப்போது வேறுவிதமான
நறுமண வாசம் வீசுகிறதோ..?
என்னாயிற்று நீதி?
சர்வதேச வாயாடிகளே !
தமிழக அரசியல் வியாதிகளே !
மெளனமாகி விட்டீர்களே.. என்னாயிற்று.. ?
ஒ..! உங்கள் வாயில்
மெல்ல வேறெதும் அவுல் இருக்கிறதோ ?
***
யாரேனும்
இரயில் பாதைகளில்
காய்ந்துப்போன மலங்களின் மீது
மலங்கழித்தது உண்டா ..?
யாரேனும்
குப்பைத்தொட்டிக்குள்
தலையை முக்கியெடுத்து
ஒரு வேளை பசியை தீர்த்தது உண்டா ?
யாரேனும்..
நள்ளிரவு நடுங்கிய குளிரில்
ஒடுங்கிய எலும்பு உடலுக்கு
போர்வையின்றி போராடியதுண்டா ?
யாரேனும்
நடுநிசி பசியெடுத்த மாற்றான் குழந்தைக்கு
மார்பக காம்பைக் கொடுத்து
ஆறுதல்படுத்தியதுண்டா.. ?
யாரேனும் குறைந்தப்பட்சம்
இவர்களைப் போன்றவர்களை
மாநகரச் சாலைவீதிகளில்
சக மனிதர்களாக மதித்து இருப்பீர்களா?
இவர்கள் தான்
இந்தியத் திருநாட்டின்
மாண்புமிகு சேரி ஜீவன்கள்.!
**
இரா.சந்தோஷ் குமார்.