கல்வியின் பெருமை புதுக்குறள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் அழகூட்டும் அணிகலன்
அறிவார்ந்த கல்வி ஒன்றே
நீராலும் நெருப்பாலும் காற்றாலும் சிதையாத
நிலையான செல்வமாம் கல்வி
கற்றிடுவாய் கல்வியைக் கருத்துடன் கற்றால்தான்
பற்றிடும் உன்னைப் புகழ்
வாழ்நாட்கள் முழுமையும் வழிகாட்டும் கல்வியை
ஆழ்ந்தறிந் தன்றாடம் கல்
பார்போற்றும் செல்வமாய் பவனிவரும் கல்வியை
ஊர்போற்ற கற்றிடு தினம்
வீழ்ச்சியை வெல்லவும் தாழ்ச்சியைப் போக்கவும்
ஆழ்ந்தக் கல்வியே துணை
எண்ணத்தில் உயரவும் எச்செயலும் சிறக்கவும்
திண்ணமாய் துணைநிற்கும் கல்வி
பெற்றோர்கள் போற்றவும் மற்றோர்கள் வணங்கவும்
உற்றதுணை உலகிலே கல்வி
ஏழ்பிறப்பும் வந்துனக்கு ஏற்றம்தரும் கல்வியை
கூழ்குடித் தேனும் அறி
கண்ணான உறவுகள் கைவிட்ட போதிலும்
கரையேற்றி தாங்கிடும் கல்வி
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்