விருப்பங்கள் மீது விருப்பம் இல்லை கவிஞர் இரா இரவி

விருப்பங்கள் மீது விருப்பம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !

விருப்பங்கள் மீது விருப்பம் இல்லை !
விரும்புவதை எழுதுவதில் தயக்கம் இல்லை !

இளம்பெண் புகைப்படமென்றால்
ஏகப்பட்ட விருப்பங்கள் விழும் !

படைப்பாளியின் படைப்பு என்றால்
படிப்பதே இல்லை பலர் முக நூலில்

தமிங்கிலம் எழுதிக் குவிக்கும்
தங்கைகளுக்கு விருப்பங்கள் குவியும் !

தமிழ்ப் பற்று கவிதையில் விதைத்தால்
தம்பிகள் பலர் விரும்புவதில்லை !

நின்றேன் நடந்தேன் தூங்கினேன் என்றால்
நான் நீ என்று போட்டிப் போட்டு விருப்பங்கள் !

இன உணர்வு ஊட்டி எழுதினால்
இன்று இளைஞர்கள் விரும்புவதில்லை !

பெண்ணுரிமை பற்றி கவிதை எழுதினால்
பெண்கள் கூட பலர் விரும்புவதில்லை !

விருப்பங்களின் எண்ணிக்கை வைத்து
வியப்பு அடைய வேண்டாம் !

விருப்பங்கள் கூடுதலாகப் பெற்றால்
விசயம் உயர்வானது என எண்ண வேண்டாம் !

விருப்பங்கள் குறைவாகப் பெற்றால்
விசயம் தாழ்வானது என எண்ண வேண்டாம் !

இந்த நூலை தயவு செய்து வாங்காதீர்
என்று பெயர் வைத்தால் வாங்குவார்கள் !

அது போல தயவு செய்து விரும்பாதீர்
என்றால் சிலர் விரும்பக் கூடும் !

விருப்பங்கள் விழா விட்டாலும்
விவேகமானவைக்கு மதிப்பு உண்டு !

விருப்பங்கள் குறித்த கவலை வேண்டாம்
விரும்பும் பதிவுகளை தொடர்ந்து பதியுங்கள் !

நரிக் கதை போல விருப்பங்களை
நீங்கள் சீச்சி சீச்சி அப்பழம் புளிக்கும் !

என்று நினைத்தாலும் தவறு இல்லை
என்றும் நீங்கள் நீங்களாகவே இருங்கள் !

தரம் தாழ்ந்து எழுத வேண்டாம்
தரக் கட்டுப்பாடு எழுத்திலும் இருக்கட்டும் !

இன்று இல்லாவிடினும் நாளை விடியும்
என்ற நம்பிக்கை வேண்டும் படைப்பாளிகளுக்கு !

விருப்பங்கள் மீது விருப்பம் இல்லை !
விரும்புவதை எழுதுவதில் தயக்கம் இல்லை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (9-Aug-15, 10:38 am)
பார்வை : 107

மேலே