அப்துல் கலாம்
ஓயாத உழைப்பைக் கொண்டு
உயர்ந்தவர் அப்துல் கலாம்
தேயாத நிலவாய் மண்ணில்
தினமுமே வளர்ச்சி கண்டார்
ஆயாத அணுவை யெல்லாம்
ஆய்ந்ததில் வெற்றி கண்டார்
தாய்பொன்ற மனதால் எங்கும்
தர்மத்தை எடுத்து சொன்னார்
காலத்தைக் கலங்க வைத்தே
கலாமேநீ எங்கு சென்றாய்
ஞாலமே அறிந்த விஞ்ஞானி
ஞாயிறாய் திகழ்ந்த மெய்ஞானி
தூலமாய் தாங்கி நாட்டை
துவலாது காத்தாய் வென்றாய்
கோலமே குலைந்து இன்று
குமுறிட வைத்தாய் நெஞ்சை
கூரைதான் பிறந்த வீடாம்
கூவிடும் கடலின் கரையாம்
ஆரையும் வெறுத்தி டாமல்
அன்புடன் நடந்து வந்தார்
பாரையும் ஆண்டு பார்த்து
பழியின்றி பணியை செய்தார்
வேரையும் ஆய்ந்து பார்த்து
வேதியல் முடிவு கண்டார்
ஆவிதான் பிரியும் மட்டும்
ஆற்றினார் உரைகள் இங்கு
காவியம் ஆனார் நாட்டில்
கண்களில் நீரைத் தந்து
கூவியே சொன்ன சொற்கள்
குடைந்தது பலரின் காதை
பாவியாம் எமனும் வந்தான்
பழியினைத் தீர்த்துக் கொண்டான்
காய்த்திட்ட மரங்கள் என்றும்
கல்லடிப் பட்டே தீரும்
வேய்ந்திட்ட கூரை புயலில்
வெவ்வேராய் பிரிந்தே போகும்
தாய்திட்டி வளர்ந்த பிள்ளை
தரணியில் உயர்வை காணும்
ஆய்விற்கு தன்னை தந்தால்
அனைத்துமே இழக்க நேரும்
மரணத்தை வென்ற மனிதர்
மண்ணில் இதுவரை இல்லை
மங்காப் புகழ்கொண்ட சிலரே
மரணித்தும் வாழ்வர் மண்ணில்
மனிதனாய் வாழ்ந்தால் போதும்
மாநிலம் மனதால் வாழ்த்தும்
மனதினில் மக்கள் உயர்வை
மறந்தது இல்லை கலாம்
வெற்றியின் பாதை காட்டி
வெளிச்சத்தை மனதில் ஊட்டி
பற்றிட நம்மைச் சொல்லி
பரிவுடன் கேட்டுக் கொண்டு
சுற்றியே இருந்தோர் தம்மை
சொப்பனம் கான வைத்து
பற்றியே சென்றார் விண்ணை
பாதத்தைப் பணிவோம் நாளும்
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்