பெண் நிலா-11

அம்பாசமுத்திரம் தட்சிணாமூர்த்தி கோயிலுக்கு போய் காரில் இறங்கிய சத்யனின் அப்பா சுந்தரமும் அம்மா கலாவதியும், கோவிலில் இருந்த எல்லா தெய்வங்களுக்கும் அர்ச்சனை பண்ணிவிட்டு, அங்கிருந்த குளத்தின் படிகட்டில் அமர்ந்தனர்

கலாவதி குளக்கரையில் அமர்ந்திருக்கும் எல்லா இளம் பெண்களையும் நோட்டம்விட்டாள், கழுத்தில் தாலி கயிரோ தடித்த தாலிச் செயினோ இல்லாத பெண்களை பார்த்து, இதில் எந்த பெண் தன் மகனுக்கு பொருத்தமாக இருப்பாள் என்று தாயுள்ளத்தோடு பொருத்தம் பார்த்துக்கொண்டிருக்க,

ம்ஹூம் ஒருத்தி கூட என் மகனின் அழகுக்கும் உயரத்துக்கும் பொருத்தமாக இல்லை, என்று சலிப்புடன் முகத்தை சுழித்தாள்

தன் மனைவியையே பார்த்துக்கொண்டிருந்த சுந்தரம் “ என்ன கலா எந்த பொண்ணு உன் மகனுக்கு பொருத்தமா இருப்பான்னு பார்க்கிறயா’’ என்று கேட்க

“ ஆமாங்க ஆனா ஒரு பொண்ணுக்கூட அவனுக்கு பொருத்தமா இல்லைங்க” என்று கலா சலிப்புடன் சொல்ல

“ அவனுக்கு போய் பொண்ணு பார்க்கிறயே, பவாம் அந்த பொண்ணு இப்படி ஒருத்தனை கல்யாணம் பண்றதுக்கு, தற்கொலை பண்ணிகிட்டு உயிரைவிடலாம்,’’ என சுந்தரம் பல்லை கடித்தபடி கோபமாக சொன்னார்

அவரின் பேச்சில் கலாவின் கண்கள் கலங்க ‘’ ஏங்க அப்படி சொல்றீங்க என்ன பண்ணாலும் அவன் நம்மலோட ஒரே பிள்ளைங்க, இன்னொருமுறை இந்த சொல்லாதீங்க” என்றாள்

“ ஆமா இப்படியே ஒரே பிள்ளை ஒரே பிள்ளைன்னு சொல்லியே அவனுக்கு அதிகமா செல்லம குடுத்து குட்டிச்சுவராக்கிட்டோம், பின்னே என்ன கலா போனவாரம் ஹைதராபாத்துக்கு பைன் மரம் ஏத்தினதில் ஒரே லோடுக்கு மூணு லட்சரூபாய் லாபம் வந்திருக்கு, நம்ம ஐயா அதை எடுத்துகிட்டு மரம் வாங்க பார்ட்டியை பார்க்கப்போறேன்னு பொய் சொல்லிட்டு,... ஆழப்புழா போய் ஒரு படகுவீடு புக்பண்ணி யாரோ கேரளா சினிமா நடிகைகூட மூணுநாள் ஜாலியா இருந்துட்டு வந்திருக்கான்,.... அங்க இவனை எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் பாத்துட்டு எனக்கு போன்போட்டு தகவல் சொல்றாரு, எனக்கு அப்படியே நாக்கை புடிங்கிட்டு சாகலாம் போல இருக்கு, ச்சே என் பரம்பரையில யாருமே இப்படி கிடையாது இவன் மட்டும் ஏன்தான் இப்படி கெட்ட சீரழிஞ்சு நம்ம அவமானப்படுத்துறானே தெரியலை” என்று சுந்தரம் தலையில் கைவைத்தபடி புலம்பிக்கொண்டு இருக்க

இவர் பேசியதை காதில் வாங்காமல் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்த கலாவதி திடீரென முகமலர “ ஏங்க அந்த பொண்ணை பாருங்களேன் எவ்வளவு அழகா இருக்கான்னு, நம்ம சத்யனுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாங்க” என்று கலாவதி உற்சாகமாக குரல் கொடுக்க

சுந்தரம் அவள் சொன்ன திசையில் திரும்பிப்பார்த்தார், அங்கே அழகான வெள்ளைநிற ஆர்கன்சா சேலையில் தலைநிறைய வெள்ளை மல்லிகை பூவுடன் ஒரு இளம்பெண் குளத்தின் கடைசி படியில் நின்றுகொண்டு கால்களை தண்ணீரில் விட்டு அலைந்து கொண்டு தன் காதுகளில் தொங்கிய ஜிமிக்கிகள் ஆட தலையசைத்து உற்சாகமாக பக்கத்தில் இருந்த அவளைவிட இளையவனான ஒரு பையனுடன் பேசிச் சிரித்தபடி இருந்தாள்

அவளை பார்த்த சுந்தரதுக்கு அந்த கோயிலில் இருந்து ஒரு சிலை உயிர்பெற்று வந்து குளக்கரையில் நிற்ப்பது போல் இருந்தது, திடீரென்று தன் மனைவி சற்றுமுன் சொன்னது ஞாபகம் வர

‘‘அடச்சே இவ்வளவு அழகான தேவதை மாதிரி இருக்கிற பொண்ணைப் போய், குடி கூத்தியா அலையுற நம்ம மகனுக்கு கட்டிவைக்கனும்னு சொல்றியே உனக்கு எப்படிதான் மனசு வந்தது கலா” என்று தன் மனைவியிடம் குறைபட்டுக்கொண்ட சுந்தரம் எழுந்து நின்று

“ ம் வா கலா நேரமாச்சு போகலாம்” என்று மனைவியை அழைத்துவிட்டு திரும்பி படிகளில் ஏறினார்
அப்போது பின்னாலிருந்து “ஐயா” என்று யாரோ அழைக்க நின்று திரும்பியவர், அங்கே நின்றிருந்தவரை பார்த்து

“ என்னப்பா அண்ணாமலை எப்படி இருக்க பார்த்து ரொம்ப நாளாச்சு, இப்போ நெலு வியாபாரமெல்லாம் எப்படி போகுது” என்று விசாரிக்க

சுந்தரத்துக்கு கீழ் படியில் நின்றிருந்த அண்ணாமலை “ ஏதோ சுமாரா போகுதுங்கய்யா, நீங்க எங்க இவ்வளவு தூரம் கோயிலுக்கு வந்திருக்கீங்க ஏதாவது விசேஷங்களா ஐயா” என்று கேட்க

“ ம் அதெல்லாம் ஒன்னுமில்லப்பா சும்மா வீட்டுக்காரம்மா கூட வந்தேன், ஆமா நீ எப்படி இங்க”

“ என் தங்கச்சி மகளுக்கு பிறந்தநாளுங்க, அதான் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்தோம், அதாங்கய்யா நீங்க மாப்பிள்ளை பார்த்து ஆலங்குளத்தில் கல்யாணம் பண்ணி குடுத்தீங்ளே என் தங்கச்சி செல்வி அதோட மக தாங்க, அதோ அங்கே நிக்குது பாருங்க”

அண்ணாமலை கைகாட்டி இடத்தில் பார்க்க அங்கே அவர் சற்றுமுன் பார்த்த அந்த வெள்ளை உடை தேவதை நின்றிருந்தாள், ‘’அவளா அண்ணாமலை உன் தங்கச்சி பொண்ணு’’ என ஆச்சரியமாக சுந்தரம் கேட்க

“ஆமாங்க அவ அம்மா இறந்ததுக்கப்புறம் நான்தான் அவளை பார்த்துக்கிறேன், பேரு மான்சி, திருச்சில காலேஜ்ல படிக்கிறா, இப்போ படிப்பு முடிஞ்சு லீவுக்கு நம்ம வீட்டுக்கு கூட்டிவந்திருக்கேன், இன்னும் மேல படிக்கனும்னு சொல்லுறா அதுக்குதான் ஏற்பாடு பண்ணனும்” என்று அண்ணாமலை கதை சொல்பவர் போல தனது தங்கை மகளைப் பற்றி சொல்லிகொண்டு இருக்க

இங்கே கலாவதி சுந்தரத்தின் காதில் ஏதோ கிசுகிசுத்துவிட்டு அவர் கையை பற்றி தனியாக அழைத்துக்கொண்டு போனாள்.

(தொடரும்.....)

எழுதியவர் : பிரவின் ஷீஜா (13-Aug-15, 9:51 pm)
பார்வை : 281

மேலே