விடுதலை தினமா விடுமுறை தினமா

நாளை......

விடுதலை பெற்றபின்னும்
சிறையுனுள் வாழும்
தியாகிகள் சிலைக்கு மாலை சூட்டி
"மரியாதை "செய்யப்படும்.

சிறைக்குள் நில்லா
தியாகிகளின் திருச்சிலை முகத்தில்
காக்கையிட்ட காய்ந்த எச்சங்கள்
துடைக்கப்படும்.

கல்லூரிக்கு விடுமுறை வழங்கிவிட்டு
விருப்பமுள்ளவர்களை வரச்சொல்லி
சுற்றறிக்கைகள் அனுப்பப்படும்.

முடிவில்
மிஞ்சிப்போன விடுதி மாணவர்களால் மட்டும்
தியாகிகளுக்கு வீர வணக்கம் செய்யப்படும்.

பச்சை வெள்ளை காவிக்கொடிகளும்
சில பாவிகளால் ஏற்றப்படும்.

விடுமுறை நாளில்
விடுதலை நாள் வந்ததை எண்ணி
கண்ணீர்விடும் ஒருகூட்டம்.

67வதா? 68வதா?
குழம்பித்தவிக்கும் ஒரு கூட்டம்.

ஒரு நிமிடத்திற்குள் அர்த்தமறியா
தேசிய கீதத்தினை பாடிவிட்டு
அர்த்தம் புரியா புதுப்பாடல்
வீடுகள்தோறும் பாடக்கேட்கும்.

அரைமணிநேரம் வீ.......ர முழக்கம் செய்துவிட்டு
பின்னிரவுவரை
நடிகைகளின் பேட்டி ஒளிபரப்பாகும்.

நாளை

இந்திய விடுதலை தினமா?? இல்லை வெறும் விடுமுறை தினமா??

எழுதியவர் : மு.ஜெகன். (14-Aug-15, 6:06 am)
பார்வை : 621

மேலே