இதுவும் ஒரு நகரத்து வாழ்வு
இரு காலு கொண்டு நான் கூட
நாலு காலு நாய் போலே
காசு கொடுத்து நின்னாலும்
கடைசி நேர காத்திருப்பால்
அலறியடித்த தூக்கத்தில்
அகப்பட்ட பாத்திரங்களை
போட்டு உடைத்த மிச்சத்தை
பொறுமையின்றி கழுவியே
இன்டேன் சிலிண்டர் மும்மடங்காய்
யாரோ பார்க்கும் இலாபத்தில்
சிறு தீயாய் என் சேமிப்பில்
சிற்றுண்டிக்காக சமைக்கிறேன்
ஆற வைக்கும் நேரத்தில்
ஆடையினை அயர்ன் பண்ணி
குளிக்க மறந்த சோகத்தை
குடுகுடுவென முடிக்கும்போது
பல்லில் இருக்கும் பிரஷினை
வெடுக்கெனதான் பிடுங்கினேன்
நாக்கிலிருக்கும் கோழையோடு
நடு தொண்டையிலிருந்து இரத்தம் வர
கொப்பளித்து வரும் கோபத்தில்
கொடுமையென துப்பினேன்
சூடாய் இருக்கும் சிற்றுண்டி
சுற்ற மறந்த மின் விசிறியாய்
வெட்டுபட்ட மின்தடையால்
வியர்வை மீண்டும் குளியலால்
அள்ளிபோட்ட வாயினில்
ஆவி பறக்கும் பசிக்காக
எந்த எலும்பில் இது ஒட்டும்
இருக்கும் சதையும் குறைந்துவிடும்
தேனை மட்டும் இரு சோட்டால்
திருப்திக்காக குடித்து விட்டு
தினம் போகும் வேலைக்கும்
திரும்ப திரும்ப சுற்றும் வாழ்வு
கற்ற கல்வி கசந்து விடும்
கைப்பிடி கடலளவாய் கண்ணீர்விடும்