சுதந்திரம் அடைந்துவிட்டோம்

பறக்கவிடுவதற்காக
கூண்டுக்குள் அடைபட்டுக்கிடந்தது புறாக்கள்.

கொடியினில் வைத்து கட்டுவதற்கு
கட்டாயமாக பறிக்கப்பட்டன
பாதி மலர்ந்த பூக்களும்.

முதல்வர் வரும் வழியில்
மறிக்கப்பட்டுக்கிடந்த அவசர ஊர்தியில்
அவயமிட்டுக்கிடந்தாள் ஒரு கர்ப்பிணி.

வழக்கத்துக்கு மாறாக
கூடுதலாக தொங்கிகொண்டிருந்தது
தோலுரிப்பட்ட கிடாக்கள் கசாப் கடைகளில்.
ரத்தத்தினை எடை போட்டுக்கொண்டிருந்தார்
கடை முதலாளி பையில் குத்திய கொடியோடு.

இன்றும்
அதிகாலை தூக்கம் இழந்து
சமைத்துக் கொண்டிருந்தாள் ஒரு தாரம்.

கூண்டுப்புறாக்கள் பறந்தன.
பூக்களை சிந்திவிட்டு கொடியும் பறந்தது.
குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று
கூசாமல் பேசிக்கொண்டிருந்தார் முதல்வர்
சுதந்திரம் தினம் பற்றி.

அகதிகள் முகாமிலும்
கொடியேற்றப்பட்டது.

தலைவர்கள் உரைகளை பார்த்தவுடன்
அடுத்த அலைவரிசைக்கு மாற்றி மாற்றி
பார்த்துக்கொண்டிருந்த அப்பாவிடம் கேட்டான் மகன்
சுதந்திரம் என்றால் என்னவென்று?

பரபரப்பாக சென்று கொண்டிருந்த எனை இடைமறித்து
அரசியல் கட்சிக்காரர்கள் வழங்கிய
ஆரஞ்சி மிட்டாயில் இனிப்போடு கசப்பும் தென்பட்டது.

ஒருவேளை இதுவும் அவசரமாய்
இரவில் சமைக்கப்பட்டிருக்குமோ??

எழுதியவர் : மு.ஜெகன். (15-Aug-15, 12:43 pm)
சேர்த்தது : ஜெகன்
பார்வை : 988

மேலே