அகலிகையும், ஐஸ்கிரீமும் -Mano Red

கையெல்லாம் வழிந்த
முக்கோண ஐஸ்கிரீமை,
பரபரப்பாக
மூக்கை நுழைத்து
தின்று கொண்டிருந்த போது
அவள் என்னை நோக்கினாள்..!!

ருசியில் சுழலும்
என் நாக்கைப் போல்
என்னைப் பார்த்து நின்ற
அவளும் பாவனை செய்தாள்.
அதில் தெரிந்தது
அவளின் ஏக்கமும் ஏமாற்றமும் ..

அவள் ஏக்கத்தினை
திசை திருப்ப
முகம் திருப்பினேன்,
இருந்தாலும்
அவள் பார்க்கிறாளா இல்லையா
என்றறியத் திரும்புகையில்
இன்னும் ஏமாற்றத்துடன் அவள்..

அவளொன்றும் யாரோ அல்ல,
ரோட்டின் ஓரத்தில்
மூட்டை முடிச்சுடன்
விலாசம் தொலைத்து
கன்னத்தில் கை வைத்து
கவலைப்படும் குடும்பத்தின்
கடைக்குட்டி சிறுமி அவள் .!!

எதையும் யோசிக்காமல்
இன்று ஐஸ்கிரீம் வாங்கித் தந்தால்
நாளை அவள் அடம் பிடிக்கலாம்,
ஒருவேளை தந்தை
ரோஷக்காரனாக இருந்து
நான் கேட்டதற்காக
அவளை அடிக்கலாம்,
'தெருவுல எவன் கொடுத்தாலும்
வாங்கக் கூடாது’ என
அவளின் அம்மா சொல்லலாம்.!

இப்படி
ஐஸ்கிரீம் உருக உருக
எல்லாக் கோணங்களிலும்
யோசித்து நான் நிற்க,
அங்கு வந்த பிச்சைக்காரனுக்கு
கையிலிருந்த ஒரு ரூபாயை
யோசிக்காமல் போட்டுவிட்டு
திரும்பி ஓடி வந்தாள் அவள்...!

அதுவரை
கல்லாய்ப் போயிருந்த
என் அகலிகை மனம்,
அவளின் கால் மிதிக்காக
காத்திருந்தது போல
ஐஸ்கிரீம் வாங்க
அனிச்சையாய் ஓடியது..!!

எழுதியவர் : மனோ ரெட் (22-Aug-15, 9:10 am)
பார்வை : 147

சிறந்த கவிதைகள்

மேலே