என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் - 19

​அவரவர் வாழ்வில் இன்பமும் துன்பமும் , புயலும் அமைதியும் , கடந்து செல்பவைதான் . மறுக்கவில்லை .
அவ்வகையில் எங்கள் குடும்பத்திலும் இந்த சோக நிகழ்வு, பேரிழப்பு , அளவிட முடியாத் துயரம் அடைந்தோம் என்றால் அது எங்கள் தாத்தாவின் மரணம்தான் . ​மனிதன் பிறப்பதும் இறப்பதும் இயற்கை என்று எடுத்துக் கொண்டாலும் கூட , நிச்சயம் ஒருநாள் அனைவருக்குமே முடிவு என்று ஒன்று உண்டு என்றாலும் , எங்களுக்கு எல்லையிலா துனபத்தை அளித்தது அவரின் முடிவுற்ற வாழ்க்கைப் பயணம் .

1988 ம் ஆண்டு , மே மாதம் 25ம் நாள் , புதன்கிழமையன்று பிற்பகல் , அவர் தன் அலுவலை முடித்துக் கொண்டு , வீட்டிற்கு வருவதற்காக வெளியே வந்தார். அச்சமயம் கார் ஓட்டுனர் அங்கே இல்லாததால் , 200 மீட்டர் தள்ளியுள்ள அலுவலகத்தில் இருந்து , நடந்தே வந்தார். அன்று கோடையின் தாக்கம் அதிகம் ....அக்னி நட்சத்திரம் என்று கூறுவார்களே ....அந்த வெயில் . அந்த நேரத்தில் வெளியே நடந்து வந்ததின் விளைவு ..சூரியனின் அதிக உஷ்ணம் அவர் மீது விழுந்ததால் , Sun Stroke என்று சொல்லக்கூடிய வெப்பம் உடலில் பட்டதால், வீட்டிற்கு வந்தவர் மிகவும் களைப்பாகி , லேசான மயக்கத்துடன் படுக்கையில் விழுந்தார். மறுநாளும் அதே நிலையே நீடித்தது . மருத்துவரின் ஆலோசனைப்படி , ஓய்வில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்படியும் அலுவலக வேலையை வீட்டில் இருந்தபடியே கவனித்தார். அதிகம் கையெழுத்தும் போட வேண்டிய நிர்பந்தம் அவருக்கு . அவர்தான் நிர்வாகத்தின் மூத்த முதன்மையான பொறுப்பில் இருந்ததும் காரணம் . அன்றாட அலுவல்களும் , முடிவு எடுக்க வேண்டிய நிலையில் அவர் இருந்தார். பின்பு மருத்துவ மனையில் அனுமதித்து , சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். மறுபடியும் சிலநாட்கள் ஓயவிற்குபின் அலுவலகம் செல்ல ஆரம்பித்தார். நாங்களும் அவர் வயதாகிவிட்ட காரணத்தால் இனி செல்ல வேண்டாம் என்று தடுத்தாலும் அவர் கேட்கவில்லை. மீண்டும் ஒரு மாதம் கழித்து அவர் கேட்கவில்லை. இறுதிவரை உழைப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார். அவருக்கு அப்போது வயது 88 நடந்து கொண்டிருந்தது .

பின்பு ஒருமாதம் அலுவலகம் சென்று வந்தாலும் அவரால் முதலில் இருந்தது போன்று வேலைகளை கவனிக்க முடியவில்லை. அவருக்கென்று ஒரு நபரும் இருந்தார் , அவரை கவனித்துக் கொள்ள . ஜூலை மாத இறுதியில் மறுபடியும் மருத்துவமனையில் சேர்த்தோம் . அவர் அலுவலக நினைவிலேயே இருந்தார். பின்பு ஒரு வாரம் கழித்ததும் ஒருநாள் திடீரென்று சுயநினைவும் குறையத் தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் 7 ம் நாள் , ஞாயிற்றுக்கிழமை மதியம் நாங்கள் வீட்டில் இருந்து சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்றவுடன் ...அங்கே பரப்பரப்பாக காணப்பட்டது ...அங்கே உள்ளவர்கள் எங்களை சீக்கிரம் மேலே செல்லுமாறு சத்தமாக கூறினார்கள் ...அதற்குள் அவர் எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்பதை அறிந்து கொண்டவுடன் , மிகவும் துடித்துவிட்டோம் . கதறினோம் . எனக்கு தாங்கமுடியா துக்கம் மேலிடவே அழுது விட்டேன் . அதற்குள் மருத்துவர்கள் வந்து பரிசோதித்து விட்டு , அவரின் மறைவை உறுதி செய்தனர்.

ஏழ்மை குடுமபத்தில் பிறந்து , அதிகமாக படிக்க வசதியும் இன்றி தவித்து , பள்ளி இறுதி கல்வி அளவிற்கும் வர முடியாத சூழ்நிலையில் , படிப்படியாக முன்னேறி , தன் உழைப்பையும் , நேர்மையுமே மூலதனமாக்கி முன்னேறிய ஒரு மாமனிதர் , அன்று இந்த மண்ணுலகைவிட்டு மறைந்தார். இந்த செய்தி பரவியதும் அவரின் அலுவலக ஊழியர்கள் , உறவினர்கள் , நண்பர்கள் என்று ஒரு கூட்டமே வீட்டிற்கு விரைந்து வந்தனர். பல பெரியோர்களும் , சான்றோர்களும் , உயர்பதவியில் உள்ளவர்களும் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். அவர்களில் முக்கியமானவர்கள் , ஆனந்த் திரையரங்கின் உரிமையாளர் திரு G உமாபதி , அன்றைய நிதி அமைச்சர் நாவலர் திரு நெடுஞ்செழியன் , நடிகர் பாலாஜி , திரைப்பட இயக்குனர் அமிர்தம் ,இயக்குனர் திரு திருலோகச்சந்தர், சட்டமன்ற உறுப்பினர் திரு இராம அரங்கண்ணல் அவர்களும் மற்றும் அனைத்து பெனிபிட் பண்டுகளின் நிர்வாகிகள் , இயக்குனர்கள் , உயர் காவல்துறை அதிகாரிகள் என பலரும் வந்தனர்.

அவர் பிறந்தது 07.01.1901. அவர் மறைந்தது 07.08.1988. அவரை தகனம் செய்தது 08.08.1988 அன்று மாலை 4 மணி அளவில். அன்று திரு கருணாநிதி அவர்கள் ஏதோ அவசர சந்திப்பிற்காக , முன்னாள் பிரதமர் திரு V P சிங் அவர்களை காண டெல்லி சென்றிருந்தார் . ஆனாலும் செய்தி அறிந்தவுடன் அவரின் சார்பாக முன்னாள் அமைச்சர் ஆற்காடு திரு வீராசாமியை இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள கட்டளையிட்டதால் , அவரும் , சட்டமன்ற உறுப்பினர் திரு சோ மா ராமச்சந்திரன் அவர்களும் , முன்னாள் சென்னை மேயர் திரு சா கணேசன் அவர்களும், வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு , எரியூட்டும் வரை இருந்து எங்கள் சோகத்தில் பங்கு கொண்டதை எங்களால் மறக்க முடியாது. அன்று புரசையில் உள்ள மூன்று பள்ளிகள் விடுமுறையும் அறிவித்திருந்தனர் . அனைத்து பெனிபிட் பண்டுகளும் மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு அனைத்து ஊழியர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் . அவர் தொடர்பு கொண்டிருந்த அனைத்து அலுவலக நிர்வாகிகளும் வந்திருந்தனர். பொதுமக்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

அதன்பின்பு கலைஞர் திரு மு கருணாநிதி அவர்கள் தலைமையில் இரங்கல் கூட்டமும் சில நாட்கள் கழித்து நடைபெற்றது . அனைத்துக் கட்சிகளை சார்ந்த முன்னணியினரும் , உயர்நீதிமன்ற நீதிபதிகளும் , சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு இரங்கல் உரை ஆற்றியது என் கண் முன்னே இன்றும் நிற்கிறது . கலைஞர் திரு மு கருணாநிதி அவர்கள் எங்கள் தாத்தாவின் முழு உருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அவர் வருத்தத்துடன் கூறினார் ...தந்தைப் பெரியார் மறைவிற்குப் பின்னர் , பேரறிஞர் அண்ணா மறைவிற்குப் பின்னர் அதிகம் பாதித்தது புரசைப் பெரியவரின் மறைவுதான் என்று .
பேராசிரியர் திரு க அன்பழகன் அவர்கள் பேசும்போது , பெரியவர் ஒரு முழுமையாக வாழ்வு வாழ்ந்தார் என்றும் , சமுதாயம் பயன்பெறவே அவர் பிறந்தார் என்றும் புகழாரம் சூட்டினார் . முன்னாள் மத்திய அமைச்சர்கள் திரு N V N சோமு , திரு T R பாலு அவர்களும் , முன்னாள் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் Dr A கலாநிதி , Dr V T பலராமன் அவர்களும் இரங்கல் உரையாற்றினர் . அந்த நிகழ்ச்சியின் சில புகைப்படங்களை இங்கே இணைத்துள்ளேன் . Dr கலாநிதி அவர்கள் பேசும்போது ,எனக்காக அவர் பள்ளியில் ஒரு வருடாந்திர கட்டணத்தை செலுத்தாமல் இருந்தால் நான் மருத்துவராகவே ஆகி இருக்க முடியாது என்று நன்றியோடு ,உணர்ச்சிப் பெருக்கோடு குறிப்பிட்டு , மேடையிலேயே கண்ணீர் விட்டார் .

ஒருவர் வாழும்வரை அவரின் அருமை பெருமைகளை நம்மால் உணர முடிவதில்லை ....ஆனால் அவர்களின் மறைவிற்குப்பின் அவர்களின் இழப்பு எந்த அளவு நம்மை பாதிக்கிறது என்பதை வைத்துதான் அவர்களின் முக்கியத்துவத்தையும் , வாழ்ந்த வாழ்க்கையின் பலன்களையும் அறிய முடிகிறது . இதை அனைவரும் ஏற்பீர்கள் என்றே நினைக்கிறேன் . அவர் எந்த கட்சியும் சாராமல் , பொது தொண்டு ஆற்றி நற்பெயரையும் புகழையும் சேர்த்து வைத்து சென்றுள்ளார் என்றால் அது மிகையல்ல . இன்றும் எங்கள் குடும்பத்தின் மூலவரும் முகவரியும் அவர்தான் . காலமும் எங்கள் தலைமுறையும் வளரும் எங்கள் தலைமுறைகளும் மறுக்கவோ , மறக்கவோ இயலாது.

அவர் தனக்கென்று சொத்துக்கள் சேர்க்காமல் உள்ளவரை பலருக்கும் உதவிய உயர்ந்த உள்ளமாய் வாழ்ந்தார். அவர் நினைத்திருந்தால் பல லட்சங்களாகவும் , வீடுகளாகவும் குவித்து இருக்கலாம் . இறுதிவரை நேர்மை எனும் பாதையில் , எளிமை எனும் பண்போடு , லட்சியத்தோடு வாழ்ந்து மறைந்தார்....என்றும் எங்கள் உள்ளத்தில் வாழ்வார் ....வழிகாட்டுவார் .

மீண்டும் சந்திக்கிறேன் ...

பழனி குமார்
21.08.2015

எழுதியவர் : பழனி குமார் (22-Aug-15, 9:27 am)
பார்வை : 263

மேலே