சத்தமும் முத்தமும்

ஏதோவொரு
மழைக்காலத்தில்
என் காதலுக்கு நீ கண்ணசைத்த
கணத்தில் உன் கன்னத்தோடு
நான் சேர்த்த சத்தம் !

நம் காதல் கடிதம்
கல்யாண முகவரியையடைய
உன் வீட்டார் ஒப்புக்கொள்ள
ஓடிவந்து எந்தன்
உச்சியோடு நீ பதித்த சத்தம் !

உன் கரம்
பற்றிய முதற்பகுதியில்
காதலோடு குறைவாக
களவோடு மிகுதியாக
சிலபல கட்டவிழ்த்த சத்தங்கள் !

ஓர் உயிர்கவி சொன்ன
உன் மயங்கிய விழியோடு
எனைப் பெற்றவளின்
பெருந்துயர் உற்றவனாய்
நான் இட்ட சத்தம் !

நாட்கள் நகர
நரைமயிர் வளர
எப்போதாவது
எனை எட்டிப்பார்த்தன
உன் இதழ் சத்தங்கள் !

மரணத்திற்கு
நானும் நீயும்
மனுவிட்டிருந்தோம்
மனுக்கள்
மறுபரிசீலனையில் இருந்தன …

அத்தருணத்தில்
அத்தனை சத்தங்களும்
முழுமையடைந்தன

என் கன்னமென்றெண்ணி
காதோடு கடைசியாய்
நீ பதித்த
பொக்கைவாய் முத்தத்தோடு …..

எழுதியவர் : chelvamuthtamil (22-Aug-15, 11:38 am)
பார்வை : 700

மேலே