பேசாத மொழிகள் _ குமரேசன் கிருஷ்ணன்

மின்சார ரயிலேறிய அக்கணத்தில்
மின்னலெனத் தாக்குதல் தந்து
மின்னி மறைந்தன உன்பார்வைகள்...

காதிலொரு சாதனம்
சொருகியபடி சொற்களோடு
மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாய்
அப்பொழுதுகளில் ...நீ

எதிர்முனையின் உரையாடல்களில்
உன் மௌனங்கள் சிலநேரம்
உடைபட்டு சிறுபுன்னகைகள்
உன்உதட்டோரம் அரும்பிநிற்க...

நெற்றிசுருளும் நீள்முடி கோதியபடி
ஓரக்கண்ணால் ஒருபார்வை வீசிவிட்டு
ஒன்றுமறியாதது போல்
தொடர்வாய் உன்பேச்சை ...

ஆங்கிலம் கலந்த உன்பேச்சுக்கள்
அனிச்சையாய் என்பாதங்களை
சற்று பின்னோக்கி இழுக்க
மனம் முன்னோக்கி நகரும்...

தூரத்தில் உனை ரசித்து
துள்ளலான உன் பேச்சில்
துளிர்க்கின்ற பூவாய்
என்னுள் நான் மலர...

உன் எல்லைகளையும்
என் எல்லைகளையும்
உணரத்துவங்கிய நேரம்
படியிறங்கியிருந்தோம்... நாம்

இயல்பானதொரு பார்வையை
இதயபூர்வமாய் வீசிவிட்டு
எனைவிட்டு நீயும்
உனைவிட்டு நானும் நகர ...

மறுபடி ஒருமுறை சந்திக்காவிடினும்
சிந்திப்பாய் என்றாவது
சிலநொடிகளாவது ...நாம்
பேசாத மொழிகளை ...!
--------------------------------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (25-Aug-15, 9:51 am)
பார்வை : 1205

மேலே