அம்மாக்கள் இனம்

அலுவலகத்தில் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சி
கூட்டத்திலிருந்து தனக்காக கொடுக்கப்பட்ட
அணிச்சல் துண்டை பத்திரப் படுத்திக்கொண்டு
நகர்கிறாள் லட்சுமி அக்கா-கேட்டால்,
மகளுக்கு பிடிக்கும் என்கிறாள்.....

இப்படித்தான்......
அலுவலகத்தை சுத்தம் செய்யும் பாட்டி
வெள்ளிதோறும் பூஜையின் முடிவில்
கொடுக்கப்படும் சுண்டலை பிளாஸ்டிக்
குடுவையில் அடைத்துக்கொண்டு போவாள்
கேள்வியோடு பார்த்தால்,
பேரனுக்கு.... என தலை சொறிந்தபடி சிரிப்பாள்

இது மாதிரி தருணங்களில் எல்லாம்
என்னை பல வருடங்களுக்குப் பின்னால்
இவர்கள் தூக்கி எறிந்து விடுகிறார்கள்

பள்ளி முடிந்து வந்து
பசியில் சட்டி பானைகளை
உருட்டும் எனக்கு அட்சய பாத்திரம்
எப்போதும் அம்மாவின் முந்தானைதான்

இப்போது வியக்கிறேன்
எப்படித்தான் ஒரு முந்தானையில்
அத்தனை முடுச்சுக்களை போடுவாளோ !

ஒரு முடுச்சில்
மாடு மேய்க்கப் போனபோது
கிடைத்த சுக்கா பழமும்

பக்கத்து முடுச்சில்
மடை திருப்புகையில் பறித்த
மணத்தக்காளி பழமும்

அடுத்த முடுச்சில்
களை பறிக்கும்போது
எடுத்த குருவி முட்டையும்

மற்றொரு முடுச்சில்
காட்டுக்கு விறகுக்கு போய் வந்தவர்களிடம்
கேட்டு வாங்கிய சூர பழமும்

மடி முழுக்க
ராத்திரி குழம்புக்கென
தும்பை கீரையும் சேமித்து வருவாள்

கீரையை முறத்தில் கொட்டிவிட்டு - அவள்
அவிழ்க்கும் ஒவ்வொவொரு முடுச்சிலும்
எனக்கான அதிசயம் மறைந்திருக்கும்
பரவசத்தில் எனக்கு பசியே மறந்திருக்கும்

கிராமமோ நகரமோ
அக்காலமோ இக்காலமோ
பூமியெங்கும் இந்த அம்மாக்கள்
ஒரே மாதிரிதான் போலும் ......

எழுதியவர் : மேரி டயானா (26-Aug-15, 2:42 pm)
பார்வை : 87

மேலே