தேவை ஒரு காதல் கவிதை

உனது கிராமமும்..
எனது கிராமமும்..
துரத்த..
சென்னை வண்டி ஏறியது..
நம் காதல்.

கோவிலில்
வைத்துத்தாலிகட்டி..
வாடகை வீட்டில் குடியேறியபோது..
அந்த வீட்டில்
உன்னையும், என்னையும் தவிர..
வேறு பாத்திரங்கள் கிடையாது.!

நாம் ஓடிவந்த செய்தியில்..
ஊர் பற்றிக்கொள்ள..
உதயம் தியேட்டர் வாசலில்..
நின்றுகொண்டிருந்தோம்..
ஜில்லுனு ஒரு காதலுக்காக..!

தோட்டத்தில் ஊஞ்சல்கட்டி..
ஆடித்திரிந்த உனக்கு..
கதவே திறக்காத
சென்னைவாசிகள்..
அந்நியமானார்கள்..!

மாடியில் நின்று..
நான் மறையும்வரை..
பார்த்துவிட்டு..
தனிமைக்குள் நீ..
புதையத்துவங்குவாய்..!

அலுவலகம் நுழையும் போதே..
நான்கு சுவர்களுக்குள்..
இருக்கும் உன்னை நினைவூட்டிவிடும்..
முகப்பிலே இருக்கும் மீன்தொட்டி.!

பீச்சும் பார்க்கும் நமை..
ஏந்தி நிற்க..
ஞாயிறு தோறும்..
உன் சுடிதார் பூக்களுக்கு..
அருகிலே நான்..!

இப்படியாக கரையேறிய..
நாட்களின் ஊடே..
கருவுற்றாய் நீ.!

தேர் கொடுக்காவிடிலும்..
தேகம் கொடுத்தேன்..
கொடி நீ படர..

மார்பில் முகம் புதைத்து..
தூங்கிவிடும் உனக்கும், எனக்கும்
இடையே வயிறு இடித்தது.!

வேறுபட்ட..
இரு வர்ணங்கள் இணைந்து..
புது நிறம் தோன்றியது.!
அது இரு ஜாதியை..அழித்திருந்தது.!

எழுதியவர் : நிலாகண்ணன் (28-Aug-15, 6:08 pm)
பார்வை : 667

மேலே