பதவி

அடைவதற்காய் கால்பிடித்துக் காக்காய்ப் பிடித்து,
அடைந்துவிட்டால் கால்வாரி காவல் – படைகள்
புடைசூழ போக பொதுபாதை தன்னை
தடைபோட்டு வைப்பர் தமக்கு.

உதவி புரிந்தோரை ஊமையாய் ஆக்கி
கதவோரம் கால்கடுக்க வைத்துக் - குதறும்
நரிக்குணம் கொள்கின்ற நாற்காலி நாட்டின்
சரித்திரம் மாற்றும் சதுர்.

உட்கார நாற்காலி இல்லா திருந்தவரும்
உட்காரும் ஆளுமை நாற்காலி – வெட்கமற்று
வேண்டும் வருமான வேட்கைத் தணியாமல்
ஆண்ட னுபவிப்பர் ஆம்!

கேடிகள் கேவல மானவர்கள் போன்றோரும்
கோடிக் கணக்கில் அளவின்றித் – தேடிக்
குவிப்பதற்கே தேர்தலில் நின்றதையும் எப்ப
தவிக்கு முளதிங் குணர்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (29-Aug-15, 2:19 am)
பார்வை : 434

மேலே