வெள்ளி நட்சத்திரத்திடம் ஓர் வேண்டுகோள்

அதிகாலை வேளை
இன்னும் கதிரவன் கூட
கிழக்குக்கு திலகமிடவில்லை;
அன்னாந்துப் பார்க்கிறேன்
மேகமகள் வானில் - ஆங்காங்கே
பொன்மணி கூரைகள் வேய்ந்து
வாயு பகவானின் கண்ணசைவுக்காக
காத்துக் கொண்டிருக்கிறாள்,
அதன் ஆனந்தத்தில் திளைத்த எனக்கு
ஒரே ஆச்சரியம்
என் மனக்கண் அசைபோட்டபடியே
ஆகாயத்தின் நான்கு திசைகளையும்
என் இரு கண்களாலும்
உருட்டி உருட்டி மேய்ந்தாலும்
ஒரே ஒரு விண்மீன்தான்
மின்னலடித்துக் கொண்டிருக்கிறது!
மற்ற விண்மீன்களெல்லாம்
எங்கே சென்றன…?
அடிக்கடி கோபித்துச்செல்ல
அவைகள் ஒன்றும்
மாமியார் மருமகள்கள் அல்ல;
எங்கே போயிருப்பார்கள் - அந்த
வான்காக்கும் வாயிற் காவலர்கள் ?
இராணுவ வீரர்களுக்கு
ஆண்டு விடுமுறைபோல்
விண்மீன் தாரகைகளுக்கு
இன்றுமட்டும் விடுமுறையோ?
அப்படி அறிவிப்பேதும்
ரமணனிடமிருந்து வரவில்லையே..!
வரும்…. ஆனால், வராது….
வராது…. ஆனால், வரும்…!
அதனால்தான் பலபேர்
ரமணின் வானிலை நிலவரங்களை
கலவரங்களாய் எடுத்துக்கொள்வதில்லை..
காமடி பீஸ்களாக பார்க்கிறார்கள் !
தன் சகோதரிகளை தொலைத்துவிட்டு
அந்த ஒரு சகோதிரி மட்டும் தனியாக
அழுதுகொண்டிருப்பதை யாரறிவார்..?
வெள்ளி நட்சத்திரம் என்கிறார்களே
ஒரு வேளை அது இதுதானோ..?
நட்சத்திர கூட்டத்திடையே
தான் தனியாக தெரிவதற்காகத்தான்
மற்ற நடசத்திரங்களை
வீட்டுக்கு அனுப்பிவிட்டு
தான் மட்டும் தனியாக இராட்ஜிய
பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதோ ?
நிலவுக்கன்னி பெற்றுப்போட்ட
நட்சத்திர பட்டாளங்கள்!
சூரியகதிர்கள் பட்டுப்பட்டு
ஜொளிக்கின்ற ஜிகினா தாரகைகள்!
வெள்ளி நட்சத்திரத்தின்
நெஞ்சிற்கினிய கூட்டாளிகள்!
எனோ இன்று
எல்லோர் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு
எங்கோ கண்காணா தேசம் போனதோ..?
என் இனிய வெள்ளி நட்சத்திரமே!
உனக்கு என் பணிவான விண்ணப்பம்
தூர தேசம் சென்றிருக்கும் உன் கூட்டாளிகளை
விரைந்துச் சென்று கூட்டி வா !

எழுதியவர் : இரா.மணிமாறன் (29-Aug-15, 7:50 am)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 73

மேலே