விநாயகர் பதிகம்

கவி வணக்கம்

மதங்கொண்ட களிர்முகத் தரக்கனைப் பொருதிட்டு
வதம்செய் தவன்மீத மர்ந்தவா ---- நிதமுமே
பணிந்துன்னைப் பண்பாடி பைந்தமிழில் வாழ்த்தவே
வெண்பா புனைந்தேன் முனைந்து

அரன் அரிந்த சிரம் விடுத்து கரிமுகம் தரித்தவனை
பரம்பொருளும் கரம் குவித்து வணங்குமே ---- கரமைந்து
பெற்றவனை வணங்கி நான் வேண்டிடும் வரமொன்று
நற்றமிழ்க் கவிதைத் திறம் .

விநாயகர் பதிகம்

வானுறை கடவுளரும் ஏனைய தேவர்களும்
கானுறை தவ முனிவரும் ---தீ நிறை
வேள்விகள் செய்யுமுன் வணங்கியருள் வேண்டுவது
வேழமுகன் பாதம் தனையே (1)

காரியம் எதையும் கருதித் தொடங்குமுன்
பாருறை மாந்தர் தொழுவரே --- கரிமுகத்
தூயவன் மாயவன் மருகனுறை கோயிற்கு
போயவன் காலில் விழுந்து . (2)

காவியமாம் பாரதப் பெருங் கதையை பலநூறு
பாயிரமாய்ப் புனைந்த வியாசரவர் -வாயுரைக்க
தந்தம் உடைத் தந்த வரிகோலால் வரைந்தானை
வந்தனை செய்வோம் வணங்கி . (3)

கைலையில் குடிகொண்ட பெற்றோர் தமைச்சுற்றி
எலிவா கனமேறி வலம்வந்து -உலகைஎலாம்
சுற்றியதற் கொப்பிதெனச் செப்பிட்டு மாங்கனியைப்
பெற்றவனின் பாதமதைப் பற்று. (4)

குறுமுனி அகத்தியன் கைலயம் சென்றவண்
இருந்து கொணர்ந்ததண் கங்கைநீர் – நிறைஜபக்
கலத்தினைக் கவிழ்த்துக் காவிரியாகத் தென்திசை
நிலம்செழிக்க விட்டவனை வணங்கு. (5)

செவ்விய தமிழிலே பாடல்கள் பலபுனைந்த
அவ்வைக் கிழவிக்கு அருள்செய்து- அவர்தம்மை
கவ்வித் தன்வாயால் கைலாயம் சேர்த்தானை
பவ்(வி)யமாய்ப் பணிவோம் தினம் (6)


அருகம்புல் மாலையை அணிவித்து அதனோடு
எருக்கம்பூ சேர்த்தவரைப் * பூசித்து -- உருக்கமுடன் * சேர்த்து அவரைப்
வேண்டுமடி யார்க்கவர்கள் நாடும்வரம் நல்குவனைத்
தண்டமிட்டுத் தொழுவம் நாம். (7)


புறஅறிவின் பூரண உருவகமாய் புத்தியினை
ஒருபுறம் அமர்த்திக் கொண்டு -- மறுபுறம்
மெய்ப்பொருள் தத்துவமாய் சித்தியை வைத்திட்ட
அய்ங்கரனி னடிகள் பணிவோம். (8)

மோதகமும் முக்கனியும் பாலோடு சர்க்கரையும்
சாதித்து சிரம்தாழ்த்தி வணங்கிடின் -- காதலுடன்
வேதனைகள் நமைச்சேரா! விக்னங்கள் விலகிவிடும்!
தீதகன்று நலம்சேரும் காண். (9)

முச்சந்தி தோறும் மரத் தடிகள் மீதும்
எச்சமயமு மர்ந்த்தருள் புரிபவனை - இச்சையுடன்
மெச் சியே தொழுவோர்க்கு நலமெலாம் சேருமே
நிச்சயமி தென்றே உணர். (10)

எழுதியவர் : ரமேஷ் (31-Aug-15, 9:19 pm)
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

மேலே