நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவோம் - போட்டிக் கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
என்னங்க..மாமா..
என்று அழைத்திடும்
அவள் உன் மனைவி...
வா டா...போ டா..
என்று அழைத்திடும்
நான் உன் தோழி...
இரண்டாண்டுகளாய்த் தான்
உன் சொந்தம் கொண்டாடிடும்
அவள் உன் மனைவி...
இரண்டாம் வகுப்பிலிருந்தே
உன் நட்பு கொண்டாடிடும்
நான் உன் தோழி...
உன் வேலைப் பளுவினால்
நீ கோவம் கொட்டிடும்
அவள் உன் மனைவி...
உங்கள் ஊடல் தீர்க்க
உரிய தந்திரம் சொல்லிடும்
நான் உன் தோழி...
உனக்குப் பிடித்தவற்றை
தனக்குப் பிடித்தவையாக்கிய
அவள் உன் மனைவி...
உனக்குப் பிடிக்காதவற்றை
எனக்கும் பிடிக்காமலாக்கிய
நான் உன் தோழி...
உன் மனம் அறிந்து
நடந்து கொள்ளும்
அவள் உன் மனைவி...
உன் குணம் அறிந்து
நடந்து கொள்ளும்
நான் உன் தோழி...
சொந்தத்தால் நிச்சயிக்கப்பட்ட
உன் மறுபாதி ஜீவன்
அவள் உன் மனைவி...
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட
உன் கண்ணாடி பிம்பம்
நான் உன் தோழி...
என்னையும் அவளையும்
இவ்வாறு ஒப்பிட்டு
அவள் முன் நான் சொல்ல
அவளின் செல்ல முறைப்பில்
நீ கொஞ்சமாய் அசடு வழிந்தாய்...
"இருந்தாலும் உன் அளவுக்கு
நான் இன்னும் அவரைப்
புரிந்துகொள்ளவில்லை தோழி"
என்று அழகாய்ப் புன்னகைத்து
என் பக்கம் அவள் வர...
அந்த தேவ தருணத்தில்
எங்களுக்குள் உண்டான
ஓர் உன்னத நட்பு..அப்படியே..
நம் நட்பின் கற்பை ஒத்திருந்தது....
நீ என்றுமே...என் நண்பேன்டா.....!!!
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்