மௌண மொளிகள்

இன்றைக்கு ஒரு புதுப் படப் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். மென்மையான மெட்டு, நல்ல வரிகள், இடையில் கல் மாட்டியதுபோல, ‘மௌண மொளி’ என்றார் பாடகர். அதற்குமேல் அந்தப் பாட்டைக் கேட்கப் பிடிக்கவில்லை.

இத்தனைக்கும் அந்தப் பாட்டை எழுதிய கவிஞர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர், கவிதைகளிலும் திரைப் பாடல்களிலும் மிக நன்றாக எழுதக்கூடியவர். ஆனால் ‘மௌன மொழி’ என்று பாடகரைத் திருத்தி, மீண்டும் அந்த வரியைப் பதிவு செய்யச் சொல்ல அவருக்குத் தோன்றவில்லை, அல்லது அதிகாரம் இல்லை, அல்லது அலட்சியம்.

’இதையெல்லாம் ஒரு பாடலாசிரியர் செய்துகொண்டிருக்கமுடியுமா?’ என்று கேட்காதீர்கள். எழுத்தின்மீது அக்கறை கொண்டவர்கள், தங்கள் படைப்பின்மீது மரியாதை கொண்டவர்கள் செய்வார்கள், செய்யதான் வேண்டும்.

வைரமுத்து தன்னுடைய ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ புத்தகத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

அவர் எழுதிய ‘ஈரமான ரோஜாவே’ பாடல் பதிவாகிக்கொண்டிருக்கிறது. பாடுபவர் கே. ஜே. யேசுதாஸ்.

வைரமுத்துவுடன் ஒப்பிடுகையில் யேசுதாஸ் ரொம்ப சீனியர். எத்தனையோ தமிழ்ப் பாட்டுகளை ஊதித் தள்ளியிருக்கிறார். ஆனால் அப்போது அவருக்கு(ம்) ல, ள, ழ வித்தியாசம் கொஞ்சம் தகராறுதான்.

’ஈரமான ரோஜாவே’ பாட்டில் ஒரு வரி, ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’ என்று வரும். அந்த வரியை யேசுதாஸ் ‘தண்ணீரில் மூள்காது’ என்று பாடினாராம்.
உடனே, வைரமுத்து திருத்தியிருக்கிறார், ‘மூள்காது இல்லை, மூழ்காது’
யேசுதாஸ் பக்கா Professional. கவிஞர் சொன்னபடி திருத்திப் பாடினார்.

ஆனால் இப்போதும் ‘மூழ்காது’ வரவில்லை, ‘மூள்காது’வுக்கும் ‘மூழ்காது’வுக்கும் இடையே ஏதோ ஒரு சத்தம்தான் வருகிறது.

வைரமுத்து சும்மா இருந்திருக்கலாம், ‘சீனியர் பாடகர், தேன் போலக் குரல், அதில் பிழைகள் தெரியாது, போகட்டும்’ என்று விட்டிருக்கலாம். ஆனால் அவரோ, விடாமல் திருத்துகிறார், ‘மூழ்காது-ன்னு அழுத்திப் பாடுங்க’

யேசுதாஸ் ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றுமுறை திருத்திப் பாடிப் பார்த்தார். முடியவில்லை. கடைசியில் அவருக்குக் கோபம், ‘நான் சாகும்வரை திருத்துவீங்களா?’ என்று வைரமுத்துமேல் எரிந்து விழுந்தாராம்.

அதற்கு வைரமுத்து சொன்ன பதில், ‘தமிழ் சாகாதவரை திருத்துவேன்’
வைரமுத்துவின் பெரும்பாலான ‘சுயசரிதை’க் குறிப்புகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ இந்தச் சம்பவம் அச்சு அசல் அப்படியே நடந்திருக்காவிட்டாலும், ஓரளவு உண்மையாகதான் இருக்கும் என்று தோன்றுகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில், வைரமுத்துவேகூட தனது பாடல் வரிகள் சிதைக்கப்படுவதைக் கண்டுகொள்வதில்லை. மற்ற (இளைய தலைமுறை)ப் பாடலாசிரியர்கள் இன்னும் மோசம். எதையோ எழுதிக் கொடுத்துவிட்டோம், பாடுகிறவர்கள் அவர்கள் விருப்பம்போல் பாடிக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்போல.

இதை இன்னொரு கோணத்திலிருந்து யோசித்தால், இன்றைய சினிமாவில் பாடுகிறவர்கள், இசையமைப்பவர்கள் எல்லோரும் இளைஞர்கள். அவர்கள் தலைமுறைக்கு ‘நல்ல தமிழ்’ முழுமையாக அறிமுகமாகவில்லை.

இதனால், ஒருவேளை பாடகர் தப்பாகப் பாடினாலும்கூட இதுதான் சரி என்று கண்டுபிடித்துத் திருத்துவதற்கு யாரும் இல்லை. இதற்காகப் பாடலாசிரியர்கள் ஒவ்வொரு பாடல் பதிவுக்கும் வந்து போய்க்கொண்டிருக்கமுடியுமா?
எதார்த்தமான, ஆனால் படு அபத்தமான வாதம் இது.

திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கேமெரா கோணம், வெளிச்சம், நடிகர்கள் அணியும் உடைகள், அரங்கப் பொருள்கள், மற்றவை எப்படி அமையவேண்டும் என்று எந்த அளவு மெனக்கெடுகிறார்கள். அதில் ஏதாவது ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் கண்டுபிடித்து உடனடியாகத் திருத்துவதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள்தானே?

காட்சிகளுக்கு இப்படி மெனக்கெடுகிறவர்கள், பாடல் வரிகள்மட்டும் எப்படிப் போனாலும் பரவாயில்லை என்று நினைப்பது என்ன நியாயம்? அவற்றில் நிகழ்கிற தவறுகளுக்குப் பாடலாசிரியர் பொறுப்பு என்று இசையமைப்பாளர் நினைக்கிறார், இவர்தான் பொறுப்பு என்று அவர் நினைக்கிறார், கடைசியில் கெட்டுப்போவது யாருடைய படைப்பு? தன் பெயரில் பிசிறில்லாத படைப்புகள்மட்டுமே வரவேண்டும் என்று நினைக்கும் பெருமிதம் எங்கே போயிற்று?

திரைப்படம் என்பது மிகப் பெரிய Team Work. அதில் எத்தனையோ பேர் சேர்ந்து உழைக்கிறார்கள். பாடல் பதிவு நடக்கிற ஏழெட்டு நாள்மட்டும் ஒரு தமிழாசிரியரையோ, அல்லது ஒழுங்காகத் தமிழ் வாசிக்க, எழுதத் தெரிந்த ஒருவரையோ நியமித்தால் என்ன? அப்படி என்ன அவர்கள் லட்சமும் கோடியுமா சம்பளமாகக் கேட்டுவிடப்போகிறார்கள்?

சென்ற வருடம், ‘மயிலு’ என்ற திரைப்படத்தின் பாடல் பதிவைக் கலைஞர் தொலைக்காட்சியில் காட்டினார்கள். கார்த்திக், திப்பு, இன்னும் சிலர் சேர்ந்து ஒரு கிராமியப் பாட்டைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பாடுவதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த இசையமைப்பாளர் இளையராஜா, திடீரென்று ஒலிப்பதிவை நிறுத்திவிட்டார், ‘நீங்க பாடினதில ஒரு சின்னத் திருத்தம், பயிரு இல்லைப்பா, பயறு’ என்றார்.

‘பயிர்’ என்றால், வயலில் விளைவது – நெற்பயிர், கோதுமைப் பயிர். இப்படி.
ஆனால், ‘பயறு’ என்பது பருப்பு வகையைக் குறிக்கிறது – ‘தட்டைப் பயறு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அந்தப் பாட்டில் வருவது ‘பயறு’தான், ‘பயிரு’ அல்ல. இந்த நுணுக்கமான வித்தியாசம், கிராமத்தையே பார்த்திருக்காத இளம் பாடகர்களுக்குப் புரிந்திருக்கும் என எதிர்பார்ப்பது தவறுதான்!

ஒருவேளை ‘பயறு’வை அவர்கள் ‘பயிரு’ என்று மாற்றிப் பாடிவிட்டால்கூட, என்ன பெரிதாகக் குடி முழுகிவிடும்? இதையெல்லாம் யார் கவனிக்கப்போகிறார்கள்? ‘பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்’ என்கிற வரியைக்கூட ஏற்றுக்கொண்டு ‘ஹிட்’டாக்கிய தமிழகம் இல்லையா இது?

ஆனால், கவிஞர்கூடப் பக்கத்தில் இல்லாத நேரத்தில், ஒலிப்பதிவை நிறுத்தி அந்த ஒற்றை வார்த்தையைத் திருத்தவேண்டும் என்று அந்த இசையமைப்பாளருக்குத் தோன்றியதே. ஏன்?

இந்த ஒரே காரணத்துக்காக, இளையராஜாமீது ஆயிரம் குறை சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். ‘அவர் நினைக்கிறது அப்படியே வரணும்ன்னு எதிர்பார்ப்பார். சர்வாதிகாரி’ என்றுதான் அவரைப்பற்றிய பிம்பம் பதிவாகியிருக்கிறது.
ஆனால், எல்லாம் ஒழுங்காக வரவேண்டும் என்று நினைப்பது சர்வாதிகாரம் இல்லை. கலைமீது இருக்கும் அக்கறை, தன்னுடைய படைப்பின்மீது இருக்கும் முனைப்பு. அது இல்லாமல் அலட்சியம் செய்தால் நமக்கு ‘மௌண மொளி’கள்தான் பரிசாகக் கிடைக்கும்.

முக்கியமான பின்குறிப்பு: ‘மௌண மொளி’ப் பாடலின் இசையமைப்பாளர், அதே இளையராஜாவின் சொந்த மகன்தான். அப்பாவிடம் இதைமட்டும் அவர் கற்றுக்கொள்ளவில்லைபோல!
***
என். சொக்கன் …
14 04 2009
(படித்து மகிழவே இந்த பகிர்வு)

எழுதியவர் : என். சொக்கன் on: April 14, 2009 (3-Sep-15, 7:52 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 132

சிறந்த கட்டுரைகள்

மேலே