ஒழுகிச் சிதறிய சிவப்பு

இழுவைக் கதவில்
மங்கிவிட்ட
கூட்டல் குறியீட்டுக்கு
மறு வண்ணம் தீட்டுகிறார்கள்.

ஒழுகிச் சிதறிய
சிவப்பு வண்ணத்
திட்டுக்களை
விரைந்து துடைக்கிறான்
உதவிக்காரச் சிறுவன்.

அசையாது படுத்துறங்கும்
கருப்பு நாயொன்று
அவ்வப்போது
பார்த்துக் குரைக்கிறது
இவர்களை.

அரவமற்ற ஒரு
ஞாயிறின் மதியத்தில்
இழுத்திறக்கிய
கதவின் பின்னால்
மருந்து வாசனை
சுவாசம் நிரப்ப
மருந்து கடைக்காரர்
கடைக்குள்ளேயே
தூக்கிட்டுக்கொண்டு
இன்றோடு
பதினைந்து நாட்களாகிறது.

வினோதம்தான்

மரணிக்க
அத்தனை விசேஷ
மருந்துகள் இருந்தும்
மருந்துக் கடைக்காரர்
தூக்குக் கயிறைத்
தேர்ந்தெடுத்ததும்
மருந்துக்கடை
மீண்டும்
மருந்துக்கடையே
ஆவதும்.

எழுதியவர் : லோ. கார்த்திகேசன் (6-Sep-15, 10:10 pm)
பார்வை : 53

மேலே