பிடிப்பதற்கும் வெறுப்பதற்கும்
மலரினும் மெல்லிய மனம்,
கல்லினும் கடியதாய் மாறிடுதே;
கூடிக்கலந்த பிரியமும்
கூடா நட்பாய் மாறிடுதே.
கல்லிடை நாருரிக்கும் வாய் ஜாலம்
மணலினை கயிரென திரிக்கும் மடம்
பொய்யாட்டம் பொம்மலாட்டமே
சூதுதனை வாழ்வு கவ்வுமென
அறிந்தும் அறியாமல்
வாய்மையும் வெல்லும் என
தெரிந்தும் தெரியாமல்
நிஜவாழ்விலும் வேடமிடும் மானிடம்
கண்டு களிப்படையும் கடவுளுக்கும்
கைகொட்டி ரசிக்க காட்சிப்பொருளானதே
மீண்டும் ஒரு ராமன் கதையில் கூனி,
இல்லாவிடில் இங்கேது சுவாரசியமே.
அகமொன்று புறமொன்று நினைவு
உள்ளொன்றும் வெளியொன்றும் பேச்சு
நினைவுக்கும் பேச்சுக்கும் இடைவெளி
ஏற்றிடில் ஏமாற்றுவதும் ஏமாறுவதும்
சாதாரணமா,
சாதா ரணமா?

