காதலா - கற்குவேல் பா

பட்டினப்பாக்கம் பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்ட ,
12 B பேருந்தோடு தொற்றிக்கொண்டது என் காதல் .
இருக்கைகள் அனைத்தும் வேகமாய் நிரம்பிவிட ;
மிதமான வேகத்துடன் மெல்ல ஊர்ந்தது பேருந்து !
பின்னே ஏறும் வழியில் நீ நிற்க - முன்னே இறங்கும்
வழியருகே நான் நிற்க ; சாந்தோம் தேவாலயம் தாண்டி
கொஞ்சம் வேகம் எடுத்தது ;லஸ் கார்னர் தொட்டதும்
அதிகரித்த கூட்டம் நம்மை இடையில் சேர்த்துவிட ..
பார்வை நீரூற்றி வளர்க்கத் துணிந்தோம் காதலை.!
பாண்டிபஜார் சிக்னலில் ஓட்டுனர் விரைந்து நிறுத்த ,
என் விரல்களை தொட்டுச் சென்ற உன் விரல்கள் !
வடபழனி கடைசி நிறுத்தம் வரப்போகும் நொடியில் ;
அடித்த பிரேக்கில் என் மீது நீ தடுக்கி விழுவதற்கும் - அலாரம்
அடித்த நொடியில் கனவுகளைந்து , நான் விழித்து எழுவதற்கும்
சரியாகவே இருந்தது ! கனவில் மட்டும் கனிந்த என் காதலா ,
முதிர்கன்னி இவளின் நினைவினிலும் ஒருமுறை கனிந்துவிடு !

- கற்குவேல் .பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (8-Sep-15, 12:44 pm)
பார்வை : 57

மேலே