நில் கவனி யோசி
துல்லியமாக நினைவில்
என்றும் இருக்கும்
பள்ளி நாட்களில் சில
பறந்திட வைக்கும் நமை
சற்றே நின்று பார்க்கையில்!
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா..
என்ற பாடலை..
பாடத் துவங்கி ..போதாத காலம்..
முந்தின தினம் பிரம்படி தந்த
வாத்தியார் முகம் பார்த்து
பாதியிலே நிறுத்தி
வெட்கப் பட்ட நாளும்..
அந்தப் பாடலும்..
அதைப் பாட எனக்கு மட்டுமே
இருந்த காரணமும்..
மஞ்சள் வெயிலில் உன் கை பிடித்து
நடந்து சென்ற பாதையும்..
குத்திய முட்களும்..
ரணமும்..நீ தடவிய
பச்சிலையின் வாசமும்..
உனது நேசமும்..
அந்தக் கணத்தில்
என் மீது பட்ட உன் சுவாசமும்..
...
இன்னும் என்னவெல்லாம்
வந்துகொண்டே இருக்கின்றன
தொடர்ச்சியாக..
நீயோ..நானோ..
ஒருவரை ஒருவர் ..வாழ்வில்
தொடர முடியாமல்
போன பின்னும் கூட.. !
இப்போதைக்கு ..
நிறுத்திக் கொள்ளவா..
யோசிப்பதை!