அந்நிய முதலீடு

சமீபத்தில் நடைபெற்ற அந்நிய முதலீடு மாநாட்டில், சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய்க்கு அந்நிய முதலீடு தமிழ் நாட்டுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளர்கள். அது அந்நிய முதலீடோ உள்நாட்டு முதலீடோ முதலீடு என்றாலே லாப நோக்கில் செய்யப்படுவது தானே. இப்படி லாப நோக்கில் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து தொழில் தொடங்க நாம், 'நாம்' என்றால் நமது அரசாங்கம் என்னவெல்லாம் செய்து தரவேண்டும் என்றால், முதலில் நிலம், பிறகு தடையற்ற மின்சாரம், அவர்களுக்கு தேவையான தண்ணீர் வசதி இன்ன பிற. அவர்கள் நிறுவனம் தொடங்குவதற்கு முன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மைய அரசின் பசுமை தீர்ப்பாயம் ஆகியவற்றிடமிருந்து தடை இல்லா சான்று
பெற்று அளிக்க வேண்டும். அவர்களும் அளித்து விடுவார்கள். அதை பெறுவதில் ஒன்றும் சிக்கல் இருக்கப்போவதில்லை.

நிறுவனம் உற்பத்தியை தொடங்கி விடும். இதன் மூலம் நேரடியாக இத்தனை ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக இத்தனை ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நமது அரசாங்கம் அறிக்கை விடும்.
அந்நிறுவனத்தின் உற்பத்தி பொருள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகும். இங்கேயே விற்றாலும் அந்த பணம் வெளிநாட்டுக்கு போகும். அதாவது, நமது விவசாய நிலத்தை அவர்களுக்கு வழங்கியது, நமது மின்சாரம், நமது நிலத்தடி நீர், நமது உழைப்பு, வரி என்ற பெயரில் அவர்கள் செலுத்தும் சிறு தொகை, இவை அனைத்தை விடவும் அவர்கள் பெறக்கூடிய லாபம் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கணக்கு பார்த்துக்கொள்ளுங்கள். இது குறித்து நான் 2004-ல் தினமணிக்கு எழுதிய கடிதம் பாருங்கள்.

இதைவிட கொடுமையானது, பாலாற்றங்கரையில் வேலூர் மாவட்டத்தில், வாலாஜா தொடங்கி வாணியம்பாடி வரை விரவி கிடக்கும் நூற்றுக்கணக்கான தோல் தொழிற்சாலைகள். அவைகள் வெளியேற்றும் கழிவுப்பொருள்கள் எவை, அவற்றால் பாலாறு என்ன கதியானது என்பதெலாம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இது குறித்தும் தினமணிக்கு ஒரு கடிதம் பாருங்கள்.

முதலீடு செய்ய இங்கு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏன் அவர்கள் நாட்டில் இதே நிறுவனத்தை தொடங்கவில்லை. காரணம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தோல் பொருட்கள் முதலான அனைத்து பொருட்களும் தேவை. ஆனால், தங்கள் நாட்டை மாசுறச்செய்து இவற்றை எல்லாம் தயாரிக்க அவை தயாராக இல்லை. நம்மை போன்ற இளித்த வாய் நாட்டில் தயாரித்தளிக்கும் பொருட்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் அவர்களின் நிலம், நிலத்தடி நீர், சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுகின்றன. இது தான் உண்மை.

எழுதியவர் : ரேணுசேகர் (11-Sep-15, 6:25 pm)
Tanglish : anniya muthaleedu
பார்வை : 156

மேலே