குடிமகனே குடிக்காதே

ஊரெங்கும் பெருகிவருதே உயிர்கொல்லும் மதுபார்...
மரணத்தை விலைக்குவாங்கும் மக்களுக்காய் யார் கேட்பார்...

குடிமகனின் குடி கெடுக்கும் அரசியல் சூதாட்டம்...
குடிகாரன் குடும்பத்தார் படும்பாடோ திண்டாட்டம்...

மத்தியமும் மாநிலமும் போடும் நாடகங்கள்
ஆட்சியினை தக்கவைக்க, அடுத்தமுறை இடம்பிடிக்க....

கட்சிகளும் கொள்கைகளும் உனைகாக்க போவதில்லை...
உன் மனைவிக்கும் மக்களுக்கும் நீ போனால் நாதியில்லை...

குடிமுழுகி போய்விடுமா குடிக்காது நீ போனால்...
குடிமகனே இல்லாத புது உலகம் காண்பதென்னால்...

மதுவினால் கிடைத்திடும் லாபத்தை அரசு பார்த்து....
தடை செய்ய மறுக்கிறதே..... மனமே இது என்ன கூத்து...

மது வாங்கி குடிப்போருக்கு காத்திருக்கு மரண தண்டனை...
அதை விற்கின்ற அரசுக்கு நீதியிடம் என்ன தண்டனை...

நீதியும் போதையில் இருக்கிறதே என்ன சொல்ல...
நீயாக திருந்தாவிட்டால் உன்னை காப்பாற்ற எவருமில்ல...

மக்களின் மானம் காக்க யார் செய்வார் மதுவிலக்கு...
இப்படியே தேசமிருந்தால் மனித பிறவிக்கே இது இளுக்கு..

எழுதியவர் : முகம்மது யாசீன்.சே (17-Sep-15, 12:17 pm)
பார்வை : 85

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே