பூவாய் விரிகிறது கவிதை
ஒரு பூ விரியும்
சூட்சுமத்தோடு விரிகிறது
இந்தக் கவிதை.
கிளர்வுறுதலில்
தாய்மை ஊற்றெடுக்க
என் வெதுவெதுப்பான
உணர்வுகளில்
சிறகு நீட்டுகிறது
இந்தக் கவிதை.
கோதும் என்
மன அலைகளில்
சிலுவைகளைச் சுமக்கும்
இந்தக் கவிதையின் இரகசியங்கள்
அதி அற்புதமானவை.
அதன் சிறகசைப்புகள்
பறந்த அதன் வானம்...
எனது இமைகளின்
நெளிந்த பாதையில்
விழுந்து திரும்புகிறது
கூச்சத்துடன்.
இருள் கவிழ
என் கவிதையின்
பச்சையம் பெருகி
சலனங்களின் கூடுதலில்
பிறக்கிறது
என் கவிதையின் மொழி.
வளர்தலின் உதிர்தலில்
என் கவிதையின்
உயிர் வழுக்கி
விழித்திரையில் பதிகிறது
வானவில் வண்ணங்களுடன்.
இக் கணத்தில்
பறந்து பறந்து எழுகிறேன்...
என் முன் விழுந்த
எழுத்துக்களை
இந்த நூலில் கோர்த்தபடி.