அரும்புமீசை குறும்புப்பார்வை
ஒரே வகுப்பில்தான்
படித்தோம்.
உன்னை நான் பார்வையாலும்..
என்னை நீ பார்வையாலும்..
ஒரே வகுப்பில்தான்
படித்தோம்.
எப்போதும் இறுக்கமாய்
இருப்பாய்..
எண்ணெய் வைத்துப்பின்னிய..
உன் ரெட்டை
சடையைப்போல.!
ஏதோ ஒரு காரணத்தை
எடுத்துக்கொண்டு..
உன்னிடம் பேசவருவது
பையை எடுத்துக்கொண்டு
நியாயவிலைக்கடையில்
சீனி வாங்குவதைப்போல எனக்கு.!
நீ பார்க்காதபோது
உனை தின்றுவிட்டு
நீ பார்த்தவுடன்
தப்பிக்கும்
தண்டனைக்கைதிகள்
என் கண்கள்.!
சைக்கிளில் பள்ளிக்கு வரும்
உனக்கும்..
உன் சைக்கிளை பின்தொடரும்
எனக்கும்..
காதலென கிசுகிசுத்தது
கழிப்பறை சுவர்முழுவதும்
கரித்துண்டுகள்.!
நவ்வாப்பழக்கறை படிந்த..
நடராசா சாமின்றி பாக்சில்
அறிய புதையலெனஇருக்கும்
உன் வண்ணம் மின்னும்
வளையல் துனுக்கு.!
இவ்வாறாக
இதயம் முறுக்கேற..
இன்று காதலைச்சொல்லியே
ஆகவேண்டுமென
நான் நாலரை மணிக்கு
சொல்லத்தயாரானபோது
மணி அடித்துவிட்டிருந்தது.!