எப்படியாச்சும் காப்பாத்திடுங்க

எல்லா நோயாளிகளையும் பார்த்துவிட்டு என்னுடைய அறைக்குள் வந்து “அப்பாடி” என களைப்புடன் அமர்ந்தேன். நேற்று இரவு ஐந்து வயது சிறுவனுக்கு மாற்று இதய சத்திர சிகிச்சை செய்து இரவு முழுதும் தூங்காமல் இருந்த அசதி. சற்று கண் அயர்ந்திருப்பேன். திடீரென அலறியது மேசை தொலைபேசி மணி! “டாக்டர்….. டாக்டர்….. சீக்கிரம் ரிசெப்ஷனுக்கு வாங்க. நெஞ்சு வலியில அவதிபடுற வயசான ஒருத்தற கொண்டு வந்திருக்காங்க. பேஷன்டை ஈ. சி. ஜி. ரூமுக்கு அனுப்புறோம். அவர கூட்டிட்டு வந்தவங்க இங்கதான் நிக்குறாங்க. சீக்கிரம் வாங்க.” அந்தப் பக்கம் பெண் நர்ஸின் குரல் வேகமாக ஒலித்தது.

ரிசீவரை ஒழுங்காக வைத்தேனா இல்லையா என்றே தெரியாமலேயே ஓடினேன் ரிசெப்ஷனுக்கு. வாட்டசாட்டமான ஆண், கண்கள் கலங்கிய படி “டாக்டர் எங்கப்பாவ எப்படியாச்சும் காப்பாத்திடுங்க…..” என என் கைகளைப் பிடித்து கெஞ்சினான். அவன் அருகிலே கைக்குழந்தையுடன் ஒரு பெண் எந்தவித கலக்கமும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தாள். அவன் மனைவிபோல் தெரிந்தது. என் ஊகத்தை சரி பார்க்க இது தருணம் இல்லை. அவனை மட்டும் பார்த்து. “ஆஸ்பத்திரிக்கென்று சில ரூள்ஸ் இருக்கு. காசு ஏதும் பிரச்சினை இல்லை. ஏன்னா இங்க வேல செய்யுற எல்லா டாக்டர்களுக்கும் இதயம் இருக்கு. சப்போஸ் நோயாளிக்கு ஏதும் ஏற்பட்டா நாங்கதான் பொறுப்ப ஏத்துக்கனும். அதுனால நீங்க வந்த டைம், உங்கட விபரங்கள் எல்லாத்தையும் இங்க சப்மிட் பண்ணிடுங்க.” என கூறிவிட்டு ஈ. ஸி. ஜி ரூமுக்குள் நுழைந்தேன். அவன் வடித்த கண்ணீர் என்னை உருக்கிக்கொண்டே இருந்தது.

கிட்டத்தட்ட எழுபத்தைந்து எண்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வலியினால் துடித்துக்கொண்டிருந்தார். என்னால் முடிந்தவரை சிகிச்சையளித்தேன். சுமார் இரண்டறை மணித்தியாலங்கள் அவருடைய நோயிடம் போராடி என் கட்டுப்பாட்டுக்கள் அதனை அடக்கி வைத்தேன். மயக்க நிலையை அடைந்த அந்த பெரியவரை கண்காணித்துக் கொள்ளும்படி இரண்டு நர்ஸ்களை அங்கே விட்டு விட்டு வெளியே வந்தேன். அவரின் முழுக்குடும்பமும் அங்கே நின்றுகொண்டிருந்தன. “இங்கே எல்லாரும் நிக்காதீங்க. இரண்டு பேர் மட்டும் நின்றால் போதும். மத்தவங்க கொஞ்சம் வெளியே இருங்க.” என அனுப்பிவிட்டு அவருடைய மகனை மட்டும் அழைத்துக்கொண்டு என் ரூமுக்கு சென்றேன். “டாக்டர் என்ன பிரச்சனை?” என அவனே முந்திக்கொண்டு கேட்டான். “உங்க பெயர் என்ன?” வினவினேன். “ஜீவன்” என கண்களை துடைத்துக்கொண்டே கூறினான். “இப்போ வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இன்னைக்கு முழு நாளும் இங்க அவர் இருக்கட்டும். நாளைக்கு பார்த்துட்டு முடிவெடுப்போம்.” என்றேன்.

“டாக்டர், பயப்படும்படியா ஒன்னும்……” என இழுக்கும்போதே “சீ…. சீ! அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. என சமாளித்துவிட்டு, நீங்க மட்டுமா அவருக்கு புள்ள? உங்களுக்கு சகோதரங்க யாராவது இருக்காங்களா?” என அவன் எண்ணங்களின் திசையை மாற்ற முயன்றேன். “நானும் அக்காவும் இருக்கோம். அம்மா வீட்ல இருக்காங்க. அக்கா கல்யாணம் முடிச்சு வேற ஊர்ல இருக்கா. போன் பண்ணி சொல்லியிருக்கோம்.” என்றான். “உங்ககூட வந்தது……” என நான் தொடர, “அவ என் மனைவி டாக்டர்!” என்றான். மனதில் சின்ன சந்தோஷம். என் ஊகம் சரியென்று. அதே நேரம் கண்கள் கலங்கிய படியே இருக்கும் இவன் பாசத்தைப் பார்க்கும் போது புள்ளரிப்பும் இருக்கத்தான் செய்தது. கதவருகே நர்ஸ் வந்து “டாக்டர் அந்த பேஷன்ட் கண் முழிச்சிட்டார்.” என்றாள். “மிஸ்டர் ஜீவன், வாங்க கொஞ்சம் வெளியே இருங்க. நான் உங்க அப்பாவ போய் பார்த்துட்டு வர்றேன்.” என அவனை வெளியே நிறுத்திவிட்டு ஈ. ஸீ. ஜி ரூமுக்குள் நுழைந்தேன்.

“எப்படி இருக்கீங்க ஐயா?” என ஸ்டெதெஸ்கோப்பை செவிகளுக்குள் நுழைத்துக்கொண்டே கேட்டேன். “ஏன் டாக்டர் என்னை காப்பாத்துனீங்க? நான் வாழ விரும்பல டாக்டர், என்னை காப்பாத்தாதீங்க.” என் கைகளை பிடித்து அழுதார். அவர் கண்கள் மட்டுமல்ல இதயமும் அழுதது. ஸ்டெதெஸ்கோப்பை கழற்றி களுத்தில் மாட்டிக்கொண்டேன். அவர் நெஞ்சை வருடிக்கொண்டே அவரை சமாதானப்படுத்தினேன். ஆனால் என் மணம் குழப்பமடைந்தது. பாசமான மகன் இருக்கான். பின்னர் எதற்கு இவர் வாழப்பிடிக்கவில்லை என கூறுகிறார். அவர் சற்ற அமைதியானதும் எல்லா செக்கப்புகளையும் முடித்துவிட்டு என் ரூமுக்குள் வந்து அமர்ந்தேன். “எக்ஸ் கியுஸ் மீ டாக்டர்.” என ஒரு பெண் உள்ளே நுழைந்தாள். தனியார் வைத்தியசாலை ஆயிற்றே, அதனால் யாராக இருந்தாலும் திருப்திப்படுத்தவேண்டியதும் எங்கள் கடமையாயிற்று. “உட்காருங்க!” என்றேன். “டாக்டர் என் பெயர் ராணி. இப்ப நீங்க செக்கப் பண்ணிட்டு வர்றவர்ட் மகள்.” என்றாள் “ஓ! மிஸ்டர் ஜீவன்ட அக்காவா?” என குஷனில் சாய்ந்திருந்த முதுகை முன்னே கொண்டு வந்து வினவினேன்.

“ஆமா!” சற்று முகத்தை சுளித்தபடி, விறைப்பாக தொடர்ந்தாள். “தயவு செய்து அவர காப்பாத்திடாதீங்க.” என்றாள். தூக்கிவாரிப்போட்டது எனக்கு. சற்று கோபத்துடன் “நீங்க உங்க மனசுல என்ன நெனைச்சு இருக்கீங்க. நான் டாக்டர். உயிர காப்பாத்துறதுதான் என் தொழில்.” என்றேன். என்னையும் முந்திக்கொண்டு அவள் தொடர்ந்தாள். “சார், எங்கப்பாவுக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு. எல்லா சொத்துக்களையும் தன் பெயர்ல எழுதும்படி ஜீவன்ட மனைவி கொடுமைபடுத்துறா. அவனும் இதெல்லாம் கண்டுகொள்றதில்ல. பொண்டாட்டிக்கு பயந்தவன். ஒழுங்கா சாப்பாடு போடுறதில்ல. சுகமில்லாம போனா கவனமா பார்த்துக்கொள்றதில்ல. எனக்கு பிள்ளைங்க இல்ல. அதனால என் வீட்ல எனக்கு பெரிய மதிப்பில்ல. இதுல அப்பாவையும் என் கூட கூட்டிட்டுப்போக முடியல்ல. ஏற்கனவே சீதனப் பிரச்சினையில என் கணவருக்கும் அப்பாவுக்கும் தகராறு வேற. இவர குணப்படுத்தினா மறுபடியும் அவ என் அப்பாவ கொடுமபடுத்துவா. அதனால நீங்கதான் ஏதாவது செஞ்சு அவகிட்ட இருந்து எங்கப்பாவ எப்படியாச்சும் காப்பாத்திடுங்க” என விம்மிக்கொண்டே எழுந்து சென்றாள்.

கண்களை மூடிக்கொண்டு சற்று தலையை சாய்த்தேன். “டாக்டர்…..!” இன்னொரு பெண் குரல். கண்களை திறந்து பார்த்தேன். ஜீவனின் மனைவி. “வாங்க. இருங்க” உள்ளே அழைத்தேன். அவள் விறைப்பாக வைத்திருக்கும் முகத்தை பார்க்கும்போது, ராணி கூறியது உண்மையாகத்தான் இருக்குமெனத் தோன்றியது. “ டாக்டர் என் மாமாவை எப்படியாச்சும் காப்பாத்திடுங்க! அவருக்கு என் மேல ரொம்ப பிரியம். அவர்ட சொத்தையெல்லாம் எனக்கு தருவதா சொல்லியிருந்தாரு. அதுக்குல்ல இப்படி திடீர்னு நடந்திடுச்சு. எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல. நான் கொடுக்குறேன். என் கணவரோட அக்கா வந்துட்டு போனாங்க. அவ பொறாமை புடிச்சவ. மாமாவுக்கும் அவள்ட புருஷனுக்கும் பெரிய தகராறு. அதனால தன்ட சொத்துல எதையும் அவ பேருக்கு தரமாட்டேன்னு சொல்லிட்டாரு. அதனால இவர அவங்க குடும்பத்துல யாரும் மதிக்குறதே இல்ல. நான் தான் தனியா பார்த்துக்கிட்டு இருக்கேன். இனிமேலும் நான் தான் பார்த்துக்கொள்வேன். அதனால என் மாமாவ எப்படியாச்சும் காப்பாத்திடுங்க.” என கூறிக்கொண்டே சென்றாள்.

எனக்கு தலையே சுற்றியது. எந்த வைத்தியரிடம் போய் நான் மருந்தெடுப்பது? சிறிது நேரத்தின் பின் ஜீவனை அழைத்து விபரங்களை கூறுவோம் என எண்ணும்போது அவனே உள்ளே வந்தான். “டாக்டர் பர்சனால கதைக்கனும்.” என்றான். இவனும் ஏதோ கூறவருகின்றான் என புரிந்துகொண்டு “சொல்லுங்க” என்றேன். “டாக்டர், என் அக்கா வந்தத பார்த்தேன். அவளுக்கு கெடைக்காதது யாருக்கும் கெடைக்க கூடாதுன்னு நெனைக்குறா. அப்பாவுக்கு ஏதாவது நடந்தா, அவர்ட சொத்தெல்லாம் ஆசிரமத்துக்கு போயிடும். அப்புறம் என் பொண்டாட்டி என்னை நச்சரிச்சே கொண்டுறுவா. இவுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் மாட்டிக்கிட்டு முழிக்குறேன். அதுனால அக்காவுக்கு கொஞ்சத்தையும், கடைசி காலத்துல எங்ககூடவே அப்பா இருக்குறதால எங்களுக்கு கொஞ்சம் கூடவாகவும் சொத்த எழுதி எடுக்கனும். அதுனால டாக்டர் உங்கள கெஞ்சி கேட்குறேன், என் பொண்டாட்டிக்கிட்ட இருந்து என்ன எப்படியாச்சும் காப்பாத்திடுங்க. அதுக்கு என் அப்பாவ எப்படியாச்சும் காப்பாத்திடுங்க.” என்றான். “நல்ல ஆளென்று நினைத்தால், இவனும் சொத்துக்காகவா?” என வியப்பில் ஆழ்ந்தேன் அவர் மனைவியிடம் கூறலாம் என பொறி தட்ட “ஆமா உங்க அம்மா எங்கே?” என கேட்டேன். “அவ வீட்டுல எல்லா வேலையும் செய்யுறதால, அவுங்கள வீட்லயே விட்டுட்டு வந்துட்டோம்.” என்று நிதானமாக கூறிவிட்டு கிளம்பினான். “அடப்பாவிகளா…” என மனதில் நொந்துகொண்டேன்

சிறிது நேரம் கழித்து ஒரு நர்ஸ் மூலமாக யாருக்கும் தெரியாமல் வெளயில் நிற்கும் அவருடைய உறவினர்களில் ஒருவரை அழைத்துவரச்செய்தேன். அவர்களிடம் இது பற்றி கூறிவிடலாம் என்ற எண்ணத்தில் இரந்தேன். “வணக்கமுங்க!” ஒரு பெரியவர் வந்தார். அப்பாடி, குழப்பத்திற்கு தீர்வு வந்துவிட்டது என பேச்சை ஆரம்பிக்க தொடங்கும்போது அவரே ஆரம்பித்தார். “ஐயா, எனக்கு அவரு மச்சான் முறை. பெரிய பாவம். நல்லா வாழ்ந்த மனுஷன். இப்போ புள்ளைங்களால பாடுபடுறாரு. நல்லா வாழ்ந்த காலத்துல எங்களயெல்லாம் மதிக்காம நடந்தாரு. தலைக்கணம் வேற. அதான் இப்ப அவதிப்படுறாரு. நெறைய சொத்திருக்கு. புள்ளைங்க எல்லாம் அதுக்கு சண்ட போடுறாங்க. இவருட மருமக இருக்காளே…. அப்பப்பா….!” தலையில் அடித்துக்கொண்டு தொடர்ந்தார். “யாருக்கும் சொத்தே கெடைக்காம பண்ணிடுங்க. போலீசுக்கு சொன்னாலும் பரவாயில்ல. சொத்த எப்படியாச்சும் காப்பத்திடுங்க டாக்டர்.” என்றார். சொந்தங்களைப் பற்றி சொல்லவா வேண்டும்? வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். அவரை கும்பிட்டு “சரி, குடும்ப விவகாரம் நாங்க எதுவும் செய்ய முடியாது. முதல்ல அவர குணப்படுத்திடுறோம்.” என்று கூறி அனுப்பிவிட்டேன்.

நேரம் சென்றுகொண்டிருந்தது. மீண்டும் அவரையும் இன்னும் நாலைந்து நோயாளிகளையும் பார்த்துவிட்டு என் அறைக்கு வந்தேன். “டாகடர் தம்பி உள்ள வரவா?” என பெரியவர் ஒருவர் வந்தார். “வாங்க ஐயா வாங்க” என அழைத்தேன். சற்று தள்ளாடிய படியே வந்து அமர்ந்தார். “தம்பி இன்னைக்கு காலைல நெஞ்சு வலியில வந்து சேர்ந்தாரே அவர எப்படியாச்சும் காப்பாத்திடுங்க” என்றார். “ஐயோ!” இன்னொருத்தரா எரிச்சலில் “நீங்க அவருக்கு யாரு?” என கேட்டேன். “தம்பி நான் அவனோட கூடப்படிச்சவன். நான் அவனோட நண்பன். அவனுக்கு ஏகப்பட்ட சொத்திருக்கு. அதோடு புள்ளைங்களோட கொடுமைகளும் சேந்திருக்கு. என்னோட என் ஊருக்கு வந்திடுன்னு பல தடவ கூப்பிட்டேன் அவன் வரல. இந்தத் தடவ இவன்ட சொத்தையெல்லாம் ஏதாவது அநாதை மடத்துக்கு எழுதி வைச்சிட்டு புண்ணியத்த சேர்த்திக்கிட்டு இவனையும் இவன் மனைவியையும் என் ஊருக்கு கூட்டிட்டுப் போயிடுவேன். அங்க என் குடும்பம் இவுங்கள நல்லா பார்த்துக்குவாங்க. இவன இந்த இராட்சஷர்களிடமிருந்து எப்படியாச்சும் காப்பாத்திடுங்க தம்பி. இவன் எனக்கு வேணும். என் உயிர்த்தோழர்களில் இவன் மட்டுந்தான் இப்ப என்கூட இருக்கான் தம்பி. இவன நான். இழக்கக்கூடாது. எப்படியாச்சும் காப்பாத்திடுங்க தம்பி.” என விம்மி விம்மி அழுதார்.

எனக்கு இப்பொழுதான் உண்மையான கண்ணீரின் வலி தெரிந்தது. தைரியமும் என் உடலுக்குள் புகுந்தது. இனி அவரை பராமரிக்க நல்ல நட்பு இருக்கிறது என்ற நம்பிக்கையும் உருவானது. “ஐயா, அவரு நல்லா இருக்காரு. இன்னும் ரெண்டு நாளைல நீங்க நெனைச்சபடியே அவர கூட்டிட்டுப் போகலாம்.” என்றேன். “நன்றி தம்பி” என சிறு புன்முறுவலுடன் இரு கரங்களையும் பற்றினார். “அந்தப் பெரியவரை நான் படித்த படிப்பைக்கொண்டு எப்படியாச்சும் காப்பாத்திடுவேன். ஆனால் அவரைப்போல் சொத்தை சேகரித்து பின்னர் பிள்ளைகளிடம் அவதிப்படுபவர்களை ஆண்டவா…… நீங்க எப்படியாச்சும் காப்பாத்திடுங்க!” என வேண்டிக்கொண்டே அந்தப் பெரியரை நினைத்துக்கொண்டு இவரின் தலையை வருடினேன்.

யாவும் என் கற்பனைகளுக்கு சொந்தமானவை
சித்திரவேல் அழகேஸ்வரன்

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (17-Sep-15, 11:48 pm)
பார்வை : 238

மேலே