ஏதாச்சும் ரெண்டு மிருகம்

வழக்கம்போல், சாப்பாட்டுத் தட்டு முன்னே வைக்கப்பட்டதும் ‘அப்பா ஒரு கதை சொல்லுப்பா’ என்று ஆரம்பித்தாள் நங்கை.

‘நீ சாப்பிடு, நான் சொல்றேன்’

‘நீ சொல்லு, நான் சாப்பிடறேன்’

‘சரி, உனக்கு என்ன கதை வேணும்?’

’ம்ம்ம்ம்ம்’ என்று கொஞ்ச நேரம் உம் கொட்டிக்கொண்டு யோசித்தவள் கடைசியில், ‘பாம்பும் பூனையும்’ என்றாள்.

எங்கள் வீட்டில் இது ஒரு புதுப் பழக்கம். தினமும் ராத்திரிச் சாப்பாட்டு நேரத்தில் நானோ என் மனைவியோ ஒரு கதை சொல்லவேண்டும், அதுவும் நங்கை தேர்ந்தெடுக்கிற இரண்டு மிருகங்கள் கதையின் முக்கியப் பாத்திரங்களாக வரவேண்டும்.

சாதாரணமாக ஆடு, மாடு என்றால் பரவாயில்லை, வேறு பிரபலக் கதைகளை எடுத்துக்கொண்டு பாத்திரங்களைமட்டும் வேறுவிதமாக மாற்றிச் சமாளித்துவிடலாம். கதை முடிவதற்குள் தட்டு காலியாகிவிடும்.

ஆனால், வெகு சீக்கிரத்தில் நங்கைக்கு இந்தத் தந்திரம் புரிந்துவிட்டது. ‘ஒட்டகமும் முதலையும்’ என்பதுமாதிரி கேனத்தனமான கூட்டணிகளையெல்லாம் அறிமுகப்படுத்த ஆரம்பித்தாள்.

அப்போதும் நான் சளைக்கவில்லை, ‘ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டு வித்துகிட்டிருந்தாளாம், அப்போ அந்த வடையை ஒரு ஒட்டகம் திருடிகிட்டுப் போச்சாம், அங்கே ஒரு முதலை வந்து, ‘ஒட்டகம், ஒட்டகம், ஒரு பாட்டுப் பாடேன்’னு கெஞ்சிக் கேட்டதாம்’ என்று சமாளிக்கத் தொடங்குவேன்.

’ஏய் அப்பா, நீ என்ன லூஸா?’

‘அதெப்படி உனக்குத் தெரியும்?’

‘முதலைக்குதான் பெரிய வால் இருக்கில்ல? அத்தனை ஷார்ப்பா பல்லெல்லாம் இருக்கில்ல? அப்புறம் எதுக்கு அநாவசியமாக் கெஞ்சிகிட்டிருக்கணும்? ஒட்டகத்துக் காலை அடிச்சு உடைச்சுக் கடிச்சுட்டா வடை தானாக் கீழ விழுந்திடுமில்ல?’

குழந்தைகளுக்கு வன்முறை எண்ணங்கள் வரக்கூடாது என்பதற்காக, நாங்கள் இன்றுவரை நங்கைக்கு ஒரு துப்பாக்கி பொம்மை, கத்தி, கபடா, வில், அம்பு எதுவும் வாங்கித்தந்தது கிடையாது. ஆயுத வாசனையே இல்லாத சமர்த்து பொம்மைகளாகதான் தேடித் தேடி வாங்குகிறோம், தொலைக்காட்சியிலும் அடிதடி, வெட்டு, குத்து சமசாரங்கள், மெகாசீரியல்கள் வைப்பது கிடையாது, பிறகு எப்படி அவளால் ஒட்டகத்தின் காலைக் கடித்துத் தின்னும் முதலைகளையெல்லாம் இப்படியொரு கொடூர நுணுக்கத்துடன் கற்பனை செய்யமுடிகிறது?

இன்னொரு பிரச்னை, நங்கை இப்படிக் கேள்வி கேட்க ஆரம்பித்தால் சாப்பாடு உள்ளே இறங்காது. எப்படியாவது அவளை மீண்டும் கதைக்குள் இழுத்தாகவேண்டும். இதனால், நான் ஒவ்வொரு நாளும் (நிஜமாகவே) புதுப்புதுக் கதைகளை கற்பனை செய்யவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன்.

உண்மையில், அவை எவையும் புதுக் கதைகளே இல்லை. நங்கை சொல்லும் இரண்டு மிருகங்களை வைத்துக்கொண்டு, நான் எங்கேயோ படித்த, யாரிடமோ கேட்ட சமாசாரங்களையெல்லாம் கலந்துகட்டிச் சமாளிக்கவேண்டியதுதான், வேறு வழி?

உதாரணமாக, காந்தி சின்ன வயதில் ஹரிச்சந்திரன் கதையைக் கேட்டாரா? இனிமேல் எப்போதும் எதற்காகவும் பொய் சொல்வதில்லை என்று ஒரு சபதம் எடுத்தாரா? இந்தக் கதையில் காந்திக்குப் பதிலாக ஒரு குட்டி எலி அல்லது பெரிய ஆமையை Replace செய்து கடைசி வரியில் ஒரு ‘நீதி’யைச் சேர்த்தால் புதுக்கதை ரெடி.

இப்படியே திருப்பதிக்குப் போன கரடி, ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் எட்டு தங்க மெடல் வாங்கிய வாத்து, ம்யூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து பெரும் பணக்காரனான பாம்பு, நாலு மணி நேரம் போராடி விம்பிள்டன் ஜெயித்த முயல் குட்டி, ஏர்போர்ட்டில் தங்கம் கடத்திப் பிடிபட்ட பெங்குவின், தன்னைத்தானே சிலைகளாகச் செய்து ஊர்முழுக்க வைத்துக்கொண்ட சிங்கம், ‘கௌன் பனேகா க்ரோர்பதி’யில் கலந்துகொண்ட பெருச்சாளி என்று பத்திரிகைச் செய்திகள், துணுக்குத் தகவல்களெல்லாம் நங்கைக்கான கதைகளாக மறு அவதாரம் எடுத்தன.

இந்தக் கதைகளைச் சொல்வதற்கும் ஒரு டெக்னிக் இருக்கிறது. பரபரவென்று வேகமாகச் சொல்லிவிட்டால், கதை தீர்ந்துவிடும், சாப்பாடு மிச்சமிருக்கும், ரொம்ப நீட்டி முழக்கினால், சாப்பாடு காலியாகிவிடும், கதை முடிந்திருக்காது, இந்தப் பிரச்னைகள் இன்றி இரண்டும் சரிசமமாகக் காலியாகும்படி கதையை நீட்டி, குறுக்கி ஒழுங்குபடுத்திக்கொள்ளவேண்டும்.

கிட்டத்தட்ட, பஜ்ஜி போடுவதுபோல்தான். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைக்காய்த் துண்டங்கள், இன்னொன்றில் கரைத்துவைத்த கடலை மாவு, ஒவ்வொரு துண்டமாகத் தோய்த்துத் தோய்த்து எண்ணெயில் போட, கடைசி பஜ்ஜி உள்ளே விழும்போது, வாழைக்காயும் காலியாகியிருக்கவேண்டும், மாவும் மீதமிருக்கக்கூடாது. அவ்வளவுதான் விஷயம்.

இப்படி நான் மனத்துக்குத் தோன்றிய சமாசாரங்களையெல்லாம் நங்கைக்குக் கதைகளாக மாற்றிக்கொண்டிருக்க, என் மனைவிக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை, ‘குழந்தைக்கு நல்லதா நாலு கருத்துள்ள விஷயம் சொல்றதை விட்டுட்டுக் கண்டபடி கதை சொல்றியே’ என்று கண்டிக்க ஆரம்பித்தார்.

’ப்ச், அவளுக்கு இதெல்லாம் புரியப்போகுதா என்ன?’ நான் அலட்சியமாகச் சொன்னேன், ‘அப்போதைக்குச் சாப்பாடு உள்ளே இறங்கணும், அதுக்குதான் ஏதோ ஒரு கதை, கொஞ்ச நேரம் கழிச்சு அவளே அதை மறந்துடுவா’

ஆனால், நான் நினைத்தது தப்பு என்று பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் புரிந்தது. இரண்டு நாள் முன்பாக நான் சொன்ன ஒரு கதையை, நங்கை அப்படியே அவளுடைய தங்கைக்குத் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

ஆச்சர்யமான விஷயம், அந்தக் கதையில் எலி சிவப்புச் சட்டை போட்டிருந்தது, போலீஸ்காரரிடம் மாட்டிக்கொண்டபோது, ‘ப்ளீஸ், ப்ளீஸ்’ என்று சரியாக ஏழு முறை கெஞ்சியது, கடைக்குச் சென்று மசால் தோசை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, கை கழுவத் தண்ணீர் இல்லாமல் தொப்பியில் துடைத்துக்கொண்டது என்று அந்தக் கதையில் நான் அப்போதைக்கு யோசித்துச் சொன்ன விஷயங்களைக்கூட, அவள் மிகத் துல்லியமாக நினைவில் வைத்திருந்தாள். கடைசியாகச் சொன்ன நீதியையும், நான் பயன்படுத்திய அதே வாக்கிய அமைப்பில் சொல்லி முடித்தாள்.

நங்கை சொன்ன கதை, அவளுடைய ஒன்றரை வயதுத் தங்கைக்குச் சுத்தமாகப் புரிந்திருக்காது. ஆனால் தான் அறிந்ததை முழுமையாகச் சொல்லவேண்டும் என்கிற அக்கறையில் அவள் ஒரு குறை வைக்கவில்லை. இதைப் பார்த்த எனக்குதான் ரொம்ப வெட்கமாக இருந்தது.

அது சரி, நேற்றைய கதை என்ன ஆச்சு?

நங்கை ‘பாம்பும் பூனையும்’ என்று சொன்னாளா, இந்த இரண்டு மிருகங்களை வைத்துப் பொருத்தமான ஒரு கதையை நான் யோசித்துக்கொண்டிருந்தேனா, அதற்குள் என் மனைவி உதவிக்கு வந்தார்.

‘நான் ஹாஸ்பிடல்ல வேலை செஞ்சுகிட்டிருந்தபோது நடந்த ஒரு கதையைச் சொல்றேன், கேட்கிறியாடீ?’

’அந்தக் கதையில பாம்பு வருமா?’

‘வரும்’

’சரி சொல்லு’

’ஒருத்தன் வயல்ல வேலை செஞ்சுகிட்டிருந்தானாம், அவனை ஒரு பாம்பு கொத்திடுச்சாம், சட்டுன்னு வண்டியில போட்டு எங்க ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு வந்தாங்க’

’அங்கே எங்க டாக்டர் அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க ஆரம்பிச்சார். ஆனா, அவனைக் கடிச்சது எந்தப் பாம்புன்னு அவரால கண்டுபிடிக்கமுடியலை’

’அதனால, அவனைத் தூக்கிட்டு வந்தவங்ககிட்டே கேட்டார், ‘ஏம்ப்பா, இவனை எந்த வகைப் பாம்பு கொத்திச்சு? உங்களுக்குத் தெரியுமா?’’

’உடனே அவங்க ’எந்தப் பாம்புன்னு எங்களுக்குச் சரியாத் தெரியலை டாக்டர், எதுக்கும் நீங்களே ஒருவாட்டி பார்த்துச் சொல்லிடுங்க’ன்னு ஒருத்தன் பைக்குள்ள கையை விட்டு வெளிய எடுத்தா, உயிரோட ஒரு பாம்பு நெளியுது’

’அவ்ளோதான், நாங்கல்லாம் அலறிக்கிட்டே ஆளுக்கு ஒரு பக்கமா ஓடிட்டோம், டாக்டர்கூட பயந்துபோய் ரூமுக்குள்ளே மறைஞ்சுகிட்டார்’

நங்கை மனத்துக்குள் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்துச் சிரித்தாள். பிறகு, ‘அப்புறம்? பாம்பு கொத்தின ஆளுக்கு என்ன ஆச்சு?’ என்றாள்.

’பாம்பை அரெஸ்ட் பண்ணி ஜூவுக்கு அனுப்பினப்புறம்தான் டாக்டர் நடுங்கிக்கிட்டே வெளியே வந்தார், அந்த ஆளுக்கு ட்ரீட்மென்ட் தந்து பிழைக்கவெச்சார்’

’சரி, இந்தக் கதையால நமக்குப் புரியற நீதி என்ன?’

’டாக்டரா இருக்கிறவங்க பாம்பைப் பார்த்துப் பயப்படக்கூடாது’

’ஏதோ ஒண்ணு, தட்டு காலியானா சரி!’

***

என். சொக்கன் …

03 08 2009

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (18-Sep-15, 11:09 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 126

மேலே