பசி

இந்த உலகத்தில் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் எல்லா ஜீவ ராசிக்கும் பொதுவானதுமான பசி ஒன்று இல்லாது போனால்....அப்படி ஒரு நிகழ்வை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு விளைவுகள் பயங்கரமாக இருக்கும் .....ஆனால் அமைதி ஒன்று எங்கும் தழுவி மனித வம்சமும் மிருகங்களும் பல்கி பெருகி ...மனிதன் நாகரீகங்கள் இழந்து வரலாறுகளை அழித்து எதுவும் நிகழ்கால் பதிவுகளை பதித்து வைக்க ஒரு சின்ன துண்டு காகிதம் கூட இல்லாமல் எங்கும் நிசப்தக் கடலில் ஆரம்ப மனிதனை விட மோசமாக மாறி இருப்பதான ஒரு காட்சி.....அப்போது மதங்களுக்கு அங்கே வேலைகள் இல்லாம இறை தளங்கள் எல்லாம் அனாதையாகி தூசுக் கூட்டுக்குள் மூழ்குகின்றதுமான ஒரு வித்தியாசக் காட்சி........

பசியென்ற ஒன்றால்
பாரே இயங்குது
பசிநின்று போனால்
பூஜ்யமே மிஞ்சுது .

அலுவல்பணி முடங்கும்
ஆலையொலி அடங்கும்
அடுத்ததென் பதில்லை
ஆலயம் திறப்பில்லை

காரோட்டம் இல்லை
போராட்டம் தொல்லை
தேரோட்டம் இனியேது
தேர்தலுக்குத் தேவையேது.

கலையில்லை கொலையில்லை
கல்விபயில் சாலையில்லை
பாட்டில்லை பரதமில்லை
பட்டாடை துணியுமில்லை

வீடில்லை நாடில்லை
விஞ்ஞானமும் இல்லை
தேடலில்லை தேவையில்லை
தேடாததால் தேக்கநிலை

பொன்னாடார் பொருள்நாடார்
மண்ணாடார் மதுனாடார்
மொழிநாடார் பழினாடார்
தொழில்நாடார் பொழில்நாடார்

பங்காளி சண்டையில்லை
பாசனக்கால் பிரிவில்லை
கங்கைக்கும் காவிரிக்கும்
கத்திச்சண் டையில்லை .

அன்னமில்லை கன்னமில்லை
கன்னமில்லை காவலில்லை
அல்லாயில் லையேசுமில்லை
அரிசிவனும் அறிவரில்லை.

கீழைநாடு மேலைநாடு
என்னாடும் ஓர்நாடு
ஏழைநாடு கோழைநாடு
என்றொரு நாடேது.

கள்ளனில்லை எள்ளனில்லை
வள்ளலில்லை எள்ளலில்லை
துள்ளலில்லை கொள்ளலில்லை
கொள்ளையில்லை தொல்லையில்லை .

பரிணாம வளர்ச்சிக்கு
படிக்கட்டு பசி
பசியொன்று இலையேல்
மனிதனும் தூசி

பசியென்ற ஒன்றால்
பாரே இயங்குது
பசிநின்று போனால்
பூஜ்யமே மிஞ்சுது .

எழுதியவர் : சுசீந்திரன். (19-Sep-15, 1:53 pm)
பார்வை : 61

மேலே