காக்கி பூ

தூக்கிட்டுக் கொண்டதா..?
தூக்கு மாட்டப்பட்டதா…?
உடற்கூறு ஆய்வென்பது
ஒருதலை பட்சம்தான் !
ஊள்ளூர் விசாரணையென்பதும்
வெறும் கண்ணாமூச்சிதான் !

பொறுப்பு வகிப்பவருக்கே
பொறுப்பு இல்லாதபோது
பொங்கி எழுந்து
போர்க்கொடித் தூக்கி என்ன பயன் ?

மேலிடத்து டார்ச்சர் தாங்காமல்
மெல்லிய மேனகை மேலோகம் போனதால்
எதிரணியினரின் வாயெல்லாம் - ‘அவல்’ !

மென்றுத்துப்பி மென்றுத்துப்பி
வாய்கள்தான் புண்ணானதே தவிர
வழக்கு ஒன்றும் மேலிடத்தை
பாதித்ததாக தெரியவில்லை;

அவரவர் ஜோலிகளை
அவரவர் ஜாலியாக
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்,
சம்பவம் நடந்த தடயங்களே தெரியாதபடி..!

கம்பீர நடைநடந்து
கர்ஜனை ஏதுமின்றி
காக்கி சட்டைக்கே
கவுரவம் தேடித் தந்தவரின்
கடைசி நிமிடம்,
தூக்கு கயிற்றில்
நாக்கு வெளியில் தள்ளியபடி…!

உறவுகள் ஒப்பாரி வைக்க
நட்புகள் கதறி அழ
மீடீயாக்கள் மாறி மாறி க்ளிக்க
ஆள்பவரை தவிர
அனைத்து தரப்பினரும்
அனுதாபம் என்ற பெயரில்
அறை கூவல் விட

பாவம் பரிதாபத்துக்குறிய ஜீவன்
பாடையில் சலனமேதுமின்றி
இறுதி ஊர்வலத்துடன்
இடுகாட்டை நோக்கி
சுடுகாட்டானின் ஆணைக்கினங்க
இந்து மரபுப்படி ஈமச்சடங்கு !

வீர மங்கையின்
மரணத்திற்குப் பின்னால்
ஜாதி என்னும்
சாக்கடை நதி
கழுத்தை அமுக்கியதால்
காக்கிப் பூவின்
தன்மான உணர்ச்சி
தூக்கு கயிற்றை முத்தமிட்டது !

வெளிவராத இரகசியங்கள்
வெளிவர நேர்ந்தாலும்
வழக்கு என்னவோ
உழவன் வீட்டு ஒழக்காய்
துருப்பிடித்துப் போவதென்னவோ உண்மை !

சாமான்யனின் சாவுக்கு
சாட்டை சுயற்றிய
ஒரு காவல்காரிக்கு
காவலர்களே சகுனிகளா ?

கமாண்டோ படை
காவல் பூனை படை
பறக்கும் அதிரடி படை
எல்லாம் இருந்தும்
காவல்துறை ஏன்
கருப்பாடுகளின் கைகளில்... ?

ஒரு சாமான்ய கவிஞனின்
நியாயமான கேள்விக்கு
சரியான பதில் கிடைக்குமென்றால்
உயிர் நீத்த உத்தமியின்
ஆத்மா சத்தியமாய் சாந்தியடையும் !


இரங்கல் என்பது
வெறும் சம்பிரதாய கோர்வைகள்
வரங்கள் வாங்கி வந்தவர்க்கே
இரங்கல் பாக்களும் மோட்சம் தரும்.

எழுதியவர் : இரா.மணிமாறன் (21-Sep-15, 10:32 pm)
Tanglish : kaakki poo
பார்வை : 177

மேலே