கண்ணீரில் கறுத்த இரவுகள்

மின்னல் கீலம்
சிந்தும் வேளை
மிரண்டேன்!
உன் ஆடைகொண்ட
மேனிகண்ட பின்
மின்னலென்ன
மின்னலென்றேன்!!
சூம்பிகிடந்த
சுவாச குழாயில்
ஆண் வெட்கமெனும்
வெப்பமூற்றி
என் சுவாசப்பை
நுழைந்து
சோம்பல் முறித்தாய்!!
கனவுதோறும்
உன் முகம் காண
நினைவுகளில்
கட்டிவைத்தேன்
உன் காட்டாற்று
பேரழகை!!
காற்றுமண்டலமேறி
முத்தமிட்டு
மூர்சையானோம்!
சுவாசத்தில்
சிரமமென்று
ஆழுக்கொரு
ஆழாக்காய்
உயிரை உருவி
மென்று தணித்தோம்!!
நிமிடத்துளிகள்
ஓடி உருண்டு
வருடக்கடலில்
வந்து சேர!!
புலம்பல்
இரவெல்லாம்
நேற்றோ இன்றோ
யாசித்து பெற்றதன்று!!
நானும் நீயும்
காமக்குளத்தின்
இருள் இலையில்
ஓடித்திருந்த
தருணமெல்லாம்!!
சிந்தனை அணையை
ஒடித்தெறியுதடா!!
பூமியின்
பாரக்கணக்கில்
உன் முகம்
பார்த்தானோ எமன்!!
கல்லறைகள்
உன் மீது
மோகம் கொண்டு
கறையான் படுக்கை
செய்தனவோ!!
இறக்கும்
வயதில்லை
உனக்கு!
இறப்புக்கும்
வயதில்லை!!
என் செய்வேன்
உன் உயிர்துளியை
என் உயிரில்
வளரவிட்டு
போனவனே!
உடன்கட்டை
ஏறிட
உடன்பாடில்லையடா!
வாரமொருமுறை
வந்து கல்லறைமீது
நான் வைத்துப்போகும்
பூக்கள் வாடிப்போகும்!
நீயும் நானும்
நிலாப்பார்த்து
முத்தமிட
முட்டிச்சென்ற
இரவின்
தென்றலென்ன
இப்போதெல்லாம்
எனை விட்டா செல்லும்!!
கொன்றே போகும்
உயிர் தின்றே போகும்...