ஆசையில் ஓர் பயணம்
மலையின் உச்சியில் ஓர் நீர்த்துளி
வானத்தை தொட ஆசைப்பட்டுக் குதிக்க
தவறி விழுந்தது ஓர் அருவிக்குள்
அதிர்ச்சியில் உறைந்த அத்துளி
எப்படியாவது மலை உச்சியிலேயே
தங்கி விடலாம் என
எவ்வளவோ முயற்சித்தும்
அருவியின் வேகத்தில்
ஆண்மையற்றுப் போனது அத்துளி
வானத்தை அடைய ஆசைப்பட்டதை எண்ணி
தன்னைத் தானே நொந்துக் கொண்டது
அருவியின் வேகத்தில்
தன்னை மொத்தமாக இழந்தது
போகும் பாதையில்
இன்னும் பல அருவிகள்
இதைப் போலவே ஆசைப்பட்ட நீர்த்துளிகள்
ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டன
தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டன
இனிமேல் ஆசைப்படக் கூடாது என
ஏகமனதாய் தீர்மானம் போட்டன.
ஓர் வழியாக ஓர் பெரிய ஆற்றை
சென்றடைந்தது அத்துளி
ஆற்றிலும் அதன் பயணம் தொடர்ந்தது
எப்போதுதான் இந்தப் பயணம் முடியப் போகிறது
என அலுத்துக் கொண்டது
கடைசியாக கடலை அடைந்தது அத்துளி
இவ்வளவு பெரிய சமுத்திரத்தில்
தான் ஒரு சிறிய துளி
என்பதை புரிந்துக் கொண்டது
ஆசையே துன்பத்திற்கு காரணம் என
கடலில் ஞானம் பெற்றது அத்துளி
அன்னாந்து பார்த்தது உயரத்தில் வானம்
எகிறித் தொட இப்போது ஆசை இல்லை
மொத்த சுமையையும் இறக்கி வைத்துவிட்ட
இன்பத்தில் தூங்கியது அத்துளி
வானத்தை நோக்கி ஆவியாய் புறப்பட்டது
அதனை அறியாமல்