முதல் போணி
இந்தப் புத்தாண்டின் முதல் காலை, மூன்றரை மணி நேரத் தாமதமான ஒரு ரயிலுக்காகக் காத்திருந்து போரடித்துப்போனேன்.
அதிசயமாக, பெங்களூர் ரயில் நிலையத்தில் இன்று கூட்டமே இல்லை. பயணச் சீட்டு வழங்கும் கவுன்டர்களுக்குமுன்னால் அனுமார் வால்போல் வரிசைகள் மடங்கி மடங்கி நீளாமல் காற்று வாங்கின, ‘ஏய் ஒழுங்கா லைன்ல நில்லு’ என்று முரட்டுக் கன்னடத்தில் அதட்டும் போலீஸ்காரர்களைக் காணோம், எதிரே வருகிறவர்கள் யார் எவர் என்றுகூடப் பார்க்காமல் இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடுகிறவர்கள், சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களுக்குக் கீழே நம் கால்களை நசுங்கச் செய்கிறவர்கள் தென்படவில்லை, பிளாட்ஃபாரங்களில் கீழே படுத்து உருளலாம்போலக் காலியிடம்.
ஒருகாலத்தில் இதற்கெல்லாம் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன்பிறகு, விடுமுறை நாள்களில் பெங்களூர் காலியாகதான் இருக்கும் என்பது பழக ஆரம்பித்துவிட்டது. இங்கே வேலை செய்கிறவர்களில் பெரும்பாலானோர் அக்கம்பக்கத்து (அல்லது தூர தேசத்து) மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சேர்ந்தாற்போல் ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு அல்லது சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை கிடைத்தால் டூய் ஓட்டம் பிடித்துவிடுவார்கள், சாலைகளில் நடக்கிறவர்கள், வாகனங்கள் அதிகமில்லாமல் வலை கட்டி டென்னிஸ் விளையாடலாம்போல ஈயாடும்.
இன்றைக்கு நான் தேடிச் சென்றிருந்த ரயில், ஏழே காலுக்கு வரவேண்டியது, ஆனால் பத்து மணிக்கு மேல்தான் எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துவிட்டார்கள். அதுவரை இங்கேயே காத்திருப்பதா, அல்லது வீட்டுக்குப் போய்த் திரும்பலாமா என்கிற குழப்பத்திலேயே பாதி நேரத்தைக் கொன்றேன், மீதி நேரம் பிளாட்ஃபாரத்தின் மேலிருக்கும் பாலத்தில் முன்னும் பின்னும் நடந்ததில் தீர்ந்தது.
வழக்கமாக ரயில்களை நாம் பக்கவாட்டுத் தோற்றத்திலோ, அல்லது முன்னால் விரைந்து வருகிற எஞ்சின் கோணத்தில்தான் பார்த்திருப்போம். இன்றைக்குக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிளாட்ஃபார மேல் பாலத்தில் நடந்துகொண்டிருந்ததால், சுமார் இருபது ரயில்களை உச்சிக் கோணத்திலிருந்து பார்க்கமுடிந்தது. பளீரென்ற வண்ணத்தில், ஆங்காங்கே சதுர மூடிகளுடன் (எதற்கு?) ஒரு Giant Treadmillபோல அவை ஊர்ந்து செல்வதைப் பார்க்க மிகவும் விநோதமாக இருந்தது.
அதேசமயம், இந்தப் பாலத்தின் இருபுறச் சுவர்களில் ஆங்காங்கே சிறு இடைவெளிகள் இருப்பது ஏன் என்று புரியவில்லை. யாரும் தவறி விழ வாய்ப்பில்லை, ஆனால் எவராவது தற்கொலை நோக்கத்துடன் எகிறிக் குதித்தால் நேராக மோட்சம்தான், ரயில்வே நிர்வாகம் இதைக் கவனித்து மூடிவைத்தால் நல்லது.
பெங்களூர் ரயில் நிலையத்தில் மொத்தம் பத்து பிளாட்ஃபாரங்கள். எல்லாவற்றுக்கும் அழகாகப் பெயர்ப்பலகை எழுதிவைத்திருக்கிறார்கள். ஆனாலும் நடக்கிற மக்களில் பெரும்பாலானோர் பதற்றத்தில் எதையும் கவனிப்பதில்லை, கண்ணில் படுகிறவர்களிடம் ‘எட்டாவது பிளாட்ஃபாரம் எதுங்க?’ என்று அழாக்குறையாகக் கேட்கிறார்கள். போர்டைக் கவனிக்காவிட்டாலும், ஒண்ணு, ரெண்டு, மூணு என்று எண்ணக்கூடவா தெரியாது?
ஆறே முக்கால் மணியிலிருந்து அங்கே காத்திருந்த நான், சுமார் எட்டரைக்குப் பொறுமையிழந்தேன். காரணம், பசி.
ரயில் வருவதற்கு எப்படியும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது, அதற்குள் சாப்பிட்டுவிடலாம் என்று பாலத்தின் மறுமுனையை அடைந்தால், பளபளவென்று ஒரு கடை (பெயர்: Comesum) எதிர்ப்பட்டது. உள்ளே நுழைந்து ஒரு சாதா தோசை கேட்டால், முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு செவ்வக டோக்கன் கொடுத்தார்கள்.
‘எவ்ளோ நேரமாகும்?’
‘ஜஸ்ட் டென் மினிட்ஸ், உட்காருங்க.’
உட்கார்ந்தேன். கடையின் விளம்பரங்கள், பளபளப்புகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பசியில் எதுவும் சரியாகத் தென்படவில்லை.
சுமார் பன்னிரண்டு நிமிடங்கள் கழித்தும், என்னுடைய தோசை வரவில்லை, ‘என்னாச்சு?’ என்று விசாரித்தபோது, ‘தோசா மாஸ்டர் இன்னும் வரலை’ என்றார்கள்.
‘தோசை போடறதுக்கு எதுக்குய்யா தனியா ஒரு மாஸ்டர்? நீங்களே மாவை ஊத்திச் சுட்டு எடுங்களேன்?’
‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது சார்’ என்றார் கவுன்டரில் இருந்தவர், ‘அவர் வராம தோசை ரெடியாகாது.’
‘கொஞ்ச நேரம் முன்னாடி பத்து நிமிஷத்தில ஆயிடும்ன்னு சொன்னீங்களே!’
‘தோசா மாஸ்டர் வந்தப்புறம் பத்து நிமிஷம்.’
‘அவர் எப்ப வருவார்?’
‘தெரியலியே.’
எனக்குப் பசியும் எரிச்சலும் சேர்ந்து கத்த ஆரம்பித்தேன். கன்னடத்தில் சண்டை போடத் தெரியாது என்பதாலும், தமிழில் கோபப்பட்டுப் பிரயோஜனமில்லை என்பதாலும், ஆங்கிலம்தான் சரளமாக வந்தது, ‘தோசா மாஸ்டர் இல்லைன்னா நீங்க என்கிட்டே காசு வாங்கியிருக்கக்கூடாது, டோக்கன் கொடுத்திருக்கக்கூடாது. இது என்ன நியாயம்?’
‘கோவப்படாதீங்க சார், வேணும்ன்னா பூரி வாங்கிக்கோங்க, அதே முப்பது ரூபாய்தான்.’
’முடியாது, எனக்கு ஒண்ணு தோசை வேணும், இல்லாட்டி என் காசைத் திருப்பித் தரணும்.’
வழக்கமாக என்னுடைய கத்தல்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது. ஆனால் இன்றைக்கு அந்த ஆள் என்ன நினைத்தானோ, புது வருடத்தின் முதல் நாள் காலங்காத்தாலே சண்டை வேண்டாம் என்று காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.
முன்பைவிட அதிகப் பசி, ப்ளஸ் கோபத்துடன் நான் ரயில் நிலையத்துக்கு வெளியே வந்தேன். வேறு ஏதாவது ஹோட்டல் எதிர்ப்படுகிறதா என்று தேடியபோது உள்ளே ஒரு நப்பாசை, ‘பேசாம அந்த பூரியையாவது வாங்கித் தின்னிருக்கலாம், வீண் கௌரவம் பார்த்து இப்பப் பட்டினிதான் மிச்சம்!’
பொதுவாக ரயில் நிலையங்களுக்கு அருகே இருக்கும் ஹோட்டல்கள் விலை மிகுதியாகவும், சுவை, தரம் குறைவாகவும்தான் இருக்கும். ஆனால், பசிக்குப் பாவமில்லை, கண்ணில் பட்ட ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்து அதே சாதா தோசையைக் கேட்டேன், இங்கே விலை பதினைந்து ரூபாய்தான்.
அந்த ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கே ஒன்றும் மரியாதை இல்லை, இங்கே இந்த ஆள் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு என்ன செய்யப்போகிறார்? யோசனையோடுதான் பணத்தைக் கொடுத்தேன்.
என்னிடம் காசை வாங்கிய கையோடு, பில்லைக்கூட எழுதாமல் அவர் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார், ‘ஒரு சாதா.’
அப்புறம் நான் மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு உள்ளே போவதற்குள் தட்டில் சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாகியிருந்தது. நான் கொடுத்த பில்லை வாங்கிக் கம்பியில் குத்தி முடித்தவுடன் சுடச்சுட தோசை வந்துவிட்டது.
அந்தப் பளபளாக் கடையோடு ஒப்பிட்டால், இங்கே சுவை, தரம், Speed of Service எதற்கும் குறைச்சல் இல்லை, இத்தனையும் பாதிக்குப் பாதி விலையில். ஆனால், கூட்டம் அம்முவதென்னவோ காஸ்ட்லி கடையில்தான்.
Of Course, ரயில் பயணம் செய்கிறவர்கள் கண்ட இடத்தில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் அதற்காக, பளபளா கடைகள் எல்லாவிதத்தில் தரமானவை என்கிற குருட்டு நம்பிக்கையும், இதுமாதிரி கடைகளை முதல் பார்வையிலேயே ஒதுக்கிவைக்கிற மனப்பான்மையும் நியாயமில்லை.
சூடான தோசையை வெளுத்துக்கட்டிவிட்டு நுரை பொங்கும் ஃபில்டர் காஃபியுடன் வெளியே வந்தால், நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரயில் இன்னும் சில நிமிடங்களில் ஏழாவது பிளாட்ஃபாரத்துக்கு வந்து சேரும் என அறிவித்தார்கள்.
அவசரமாகக் காஃபியை விழுங்கிவிட்டுப் பாலத்தைத் தேடி ஓடினேன். ஏழாவது பிளாட்ஃபாரம் எங்கப்பா? இப்போது, என் கண்ணுக்குப் பெயர்ப்பலகைகள் தென்பட மறுத்தன.
எப்படியோ ஏழாம் நம்பரைக் கண்டுபிடித்துப் படிகளில் இறங்கினால், ரயில் ஏற்கெனவே வந்திருந்தது, ‘ஸாரிப்பா, ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’
‘இல்லை, ஜஸ்ட் மூணு மணி நேரம்’ அசட்டுத்தனமாகச் சிரித்துவைத்தேன், ‘பாவம், ரயில் லேட்டானா அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?’
‘இவ்ளோ நேரம் காத்திருக்கறதுன்னா ரொம்ப போரடிச்சிருக்குமே.’
’உண்மைதான்’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்குள், ‘பகவத் கீதா’மாதிரி இல்லாவிட்டாலும், ஒரு ‘பகவத் சாதா’ பாடமாவது கற்றுக்கொள்ள முடிந்ததே. புத்தாண்டுக்கு நல்வரவு!
***
என். சொக்கன் …
01 01 2010