தேவதை
சாலையோரத்தில் ஒரு
தேவதை...
இறங்குகிறாள்.
மார்புகணக்காத..
ஒரு தாயின் வயிற்றிலிருந்து..
...
தேவதை..கறுத்துத்தானிருந்தாள்..
அழுக்கு தூசிகளிடையே..
கிழந்த சேலை த்திரையின்
ஓட்டைகள் வழியே..
உலகை ப்பார்த்தபடி..
வந்தாள்..அவள்..
....
வரங்கேட்ட தாயிற்கு
வரமாகவே..வந்துவிட்டாள் போலும்.
தேவதை..
....
மருத்துவமனை..செவிலியர்கள்
தீண்டாமல்..
மருந்தும் ஸ்கேனுமாய்
தாயை அலைகழிக்காமல்..
இன்னும் கத்திரிக்கு
இவ்வளவு..
என்று பேரம்பேசம்படாமல்
சுதந்திரமாய்
பிறந்தாள் தேவதை..
பிறந்ததால்..தேவதை.
.......
ஆம் அத்தேவதையை
அணங்கெனலாம்...
தேவதைக்கு..
ஆங்கிலப்பள்ளி வாசலில்
அவளது பெற்றோர்களை
பரிதவித்து நிற்க வைப்பதற்கு
விருப்பமில்லை..
ஏனெனில் தேவதை அவள்.
அவள் தன் தாயை
அம்மா என்றேஅழைத்து பழகுகிறாள்..
அவளை யாரும்
இப்படி அழை அப்படி அழை
என
நிர்பந்தித்ததில்லை..
தேவதை அவள்..
அதனால் தானோ..
தமிழ் அவளிடம் மட்டுமே..
முழுமையாய்
தங்கிவிடுகிறது.?
.......
அவள் தன் தாயின்
அருகாமையிலேயே
வளர்கிறாள்..
காப்பகங்களிலும்
ஆயாக்களின் மடிகளிலும்
அவள் அன்பு
பந்தாடப்படுவதில்லை..
ஏனெனில் அவள் தேவதை..
......
தாயின் பணிகளை
தானும் கற்கிறாள்..
கல்வியுடன் சேர்த்தே..
தாயிற்கு உதவுகிறாள்..
பலநேரங்களில்
தாயாலேயே
தாயென்றழைக்கப்படுகிறாள்..
தேவதைதான்
அவள்..
புன்னகைகள்
சற்றே..அழுக்கேறியிருக்கக்கூடும்
ஈரம் மட்டும்
உலர்வதே இல்லை..
.....
இன்னும் குருடர்கள்
தேவதைகளை
வெள்ளை..உடுப்பிலும்
தூய்மை மேனியிலும்
வேர்வையில்லா சருமங்களிலும்
தேடிக்கொண்டே..அலைகிறார்கள்..
தேவதையோ..
தன் அழுக்கேறிய முடியொதுக்கி..
தன் கந்தல் பாவாடைகளால்
வேர்வைத்துடைத்து..
மானுடம்..
தேடிக்கொண்டே..இருக்கிறாள்
ஒவ்வொரு
சாலையோரங்களிலும்...