விஞ்ஞானம் முன்னேறிவிட்டது

இருக்கும் பூமியில் வாழவே வைத்திடச்
சிறிதும் வக்கிலை வெட்கமே இன்றியே
கிரகம் தாவிடும் இந்தவிஞ் ஞானம்போல்
பெரிய கூத்தினைப் பார்த்ததும் இல்லையே!

நெஞ்சுக் கூடுமே வற்றிய ஏழைகள்
பஞ்சப் பாட்டுமே பாடும் பராரிகள்
கஞ்சிக் கோர்வழி காட்டவே துப்பிலா
வஞ்சம் தன்னைவிஞ் ஞானமே என்பதோ?

ஏவு கின்ற கணையினால் ஓர்புகழ்
மேவும் நாடெனச் சொல்லுவீர்; அப்புகழ்
காவு கொள்ளும் பசியினால் இந்தியர்
சாவு கின்றனர் என்கையில் என்னவாம்?

உழவு செய்ய ஒருதுளி நீரிலை
இழவு வீழ்ந்துயிர் இற்றுயாம் சாகையில்
நிலவு தன்னிலே நீருள தாவென
அலசும் உங்கள் அறிவினை என்சொல?

விண்ணை ஆய விரையும்விஞ் ஞானிகாள்!
மண்ணை முற்றிலும் ஆய்ந்து முடித்திரோ?
விண்ணைத் தாண்டித் துளைத்துநீர் ஆயினும்
மண்ணைத் தாண்டியே சோறு விளையுமோ?

கயிற்றில் ஆடிடும் பொம்மைகள் போல்தினம்
வியர்வை சிந்தியே ஓடெனத் தேய்ந்துசாண்
வயிற்றுக் கற்றவர் கொட்டும் வரியிலே
உயர்த்து கின்றிரோ தோளொடு நெஞ்சையே?

உழைக்கும் மக்களின் வாழ்வினை எவ்விதம்
தழைக்க வைக்கும் உமதுவிஞ் ஞானமே?
விளக்கம் உள்ளதோ உண்டெனில் ஜீவிகாள்
அளக்க வேண்டாம் அதனைப் புகலுவீர்!

எங்கள் வானம் இருண்டு கிடக்கையில்
உங்க ளுக்குவான் வேடிக்கை கேட்குதோ?
எங்கள் வாழ்வுதான் சந்தி சிரிக்கையில்
உங்க ளுக்குவான் சாகசம் கேட்குதோ?

அடுப்பில் தானடா தீயிலை தீயிலை
துடிக்கும் நெஞ்சில் அதிகமாய் உள்ளது
உடம்பு வற்றி இளைத்தவர் ஆயினும்
உடைந்தி டாத முதுகெலும் புள்ளது

மனிதம் தன்னையே மண்ணில் மறப்பது
புனிதம் என்று புகலும்மெய் ஞானமோ
கணிதம் தன்னில் கிளைக்கும்விஞ் ஞானமோ
அநித்யம் என்பதைக் காலம் உணர்த்துமே!

எழுதியவர் : செல்வமணி - இணையம் - ரௌத்திர (28-Sep-15, 11:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 197

சிறந்த நகைச்சுவைகள்

மேலே