கவிதை வரைந்த மழை

வானத்திலிருந்து
விலகிப் போயிற்று
மழைத் துளியொன்று.

நீர்ச் சுமையில்
முறிந்து சரியும் மேகம்
மின்னல் வரைந்த வானில்
மௌனத்தில் உறைகிறது.

அந்தியின் கசிவில்...
நினைவுக் குறிப்புக்களைப்
புரட்டுகிறேன்.

விடை பெற்றுப் போய்விட்ட
திரிந்த சிறகுகள்
நீர் ததும்பும் என் நதிகளில்
அலகு நனைத்து
காற்றின் வெளியில் மறைகிறது.

வலி மிகுந்த கேள்விகள்
இதயத்திலிருந்து
தேய்ந்து தேய்ந்து நகர்கிறது
இருள் கவிந்து
ஆதியில் விடப்பட்ட
வழியொன்றினூடாக.

சிதறிய பறவையாய்
அமைதியைத் தேடி
தயங்கித் தயங்கித்
தலை நீட்டுகிறேன்...
நீ எனக்காக எழுதிய
பாடலொன்றின் வரிகளில்.

கடைசி நீர்த்துளியில்
கண்ணீரை அழித்து
கலைந்து போகிறது
நம் மேல்
கவிதை வரைந்த மழை.

எழுதியவர் : rameshalam (29-Sep-15, 9:23 pm)
பார்வை : 101

மேலே