எனது 500வது கவிதை அந்தரத்தில் நான் மிதந்தேன்

செங்கை வளையும் காற்கொலுசும் கலகலெனும்
கொங்கையினை மெள்ளக் குலுக்குவதாய் எனக்குக்
கற்பூர தாம்பூலம் கையால் மடித்தளித்துப்
பொற்பூரும் மங்கை புயமழுத்திடும் சோபனக்

கனவதனைக் காகிதத்தில் கவிதையாய் எழுதிடவே
நினைந்து நானெழுந்த நள்ளிரவு நேரத்திலே
படிகளில் கேட்டது தடதடவெனும் ஓசை இங்கு
அடிக்கடி இதுபோலே கேட்டிடும் என்பதனால்

மாமதியைக் காணா மலர் ஆம்பலாகி நான்
தாமரையில் நீர் போல் தயங்கினேன் –இரண்டாம்
சாமமதில் கேட்ட கேளாத ஒலிகேட்டு என்
சேமமாம் அமைதி செருப்பின்றி ஓடியது!

கோழிக் குஞ்சொன்று குறுஞ்சிறகை அடித்ததோ
ஓலைக் கூரையினை பூனையொன்று உரசியதோ
அமானுட ஒலியினிலே ஓலத்தை எழுப்பியதோ
விமானம் ஏறியென் என் நெஞ்சு படபடத்ததோ

போய் அதனைப் பார்த்திடலாம் பொல்லாங்கு நேராது
சோதனையே வந்தாலும் நொடியிலுயிர் போகாது
ஆயினும் அவ்வரவம் அடுத்த ஒரு கணப் பொழுதில்
போயிற்று ஓய்ந்து பொல்லாத பேயதுவோ!!

படுக்கையிற் கிடந்திருந்து பலவாறு யோசித்து
முடுக்கி விட்டிடலாம் கற்பனைக் குதிரைதனை
துடுக்குத் தனமும் திமிரெடுத்த வயதாலும்
அடுக்கிய துணிவுடன் அகன்றேன் அப்பாலே!!!

அந்த எண்ணத்தைச் செயலாக்க நான் எழவே
சொந்தச் செலவினிலே சூனியம் வைத்தது போல்
வந்த தூக்கத்தில் விழக்கூடாதென் றெண்ணி
நந்திப் படிக்கட்டிடற அந்தரத்தில் நான் மிதந்தேன்.!!!!

எழுதியவர் : தா.ஜோ. ஜூலியஸ் (30-Sep-15, 12:36 pm)
பார்வை : 202

மேலே