அந்த உணர்வு
இரண்டு குழந்தைகள்
தெருவில் விளையாடிக்கொண்டு இருக்கின்றன. ஏதேதோ பொய்க் காரணங்கள் சொல்லி ,
உருட்டி மிரட்டி
ஒரு தாய் தன் குழந்தையை பிரித்து
வீட்டுக்கு அழைத்து செல்கிறாள்.
இன்னோர் குழந்தையின் மீது
லேசாக கடுப்பையும் சிடு சிடுப்பையும் காட்டுகிறாள்.
இந்த இன்னோர் குழந்தை
மனதளவில் அடிபட்டு
திகைத்துப் போய் நிற்கிறது.
வீட்டுக்குச் இழுத்துச் செல்லப்படும் குழந்தை தற்காலிகமாக தன் தாயை வெறுக்கிறது.
குடும்பத்துக்கும் நட்புக்குமான வித்தியாசம்
அதற்கு புரியத் தொடங்குகிறது.
இழுத்துச் செல்கையில்
திகைத்துப் போய் நிற்கும் தன் நண்பனை,
பரிதாபமாக பின்னால்
திரும்பி திரும்பி பார்த்த படி செல்கிறது.
அப்போது குழந்தைகளுக்கே
தெரியாமல் உருவாகி இருந்த நட்பு
இறுக ஆரம்பிக்கிறது.
குழந்தை குடும்பத்தை விட்டு
மிக லேசாக விலக ஆரம்பிக்கும் தருணம்.
வெல்கம் டூ , ஹேப்பி அண்ட் க்ரூஷியல் சோஷியல் லைஃப் கிட்ஸ் !