இன்பம் காணீர்

பதின் வயதின் எல்லைகளில்
பாவை ஒருத்தி பார்வை பட்டு
நிலை தடுமாறும் நிலை வரலாம்..
அதுவே பரம ஆனந்த நிலை தரலாம் !

...உற்றுக் காண்பீர்!

பழகும் நாட்களில் அது காதலா ..காமமா
இன்னதென்று புரியாமல் இன்னலுறலாம்
எதுவும் இல்லை..எல்லாம் வெறும்
இனக்கவர்ச்சியோ என்றும் ஒதுக்கலாம்..

...சிந்தனை செய்வீர்!

இதில் காரணங்கள் ஏதோ ஒன்றினால்
இருவருள் எதிர்பாரா பிரிவு கூட நேரலாம்..
வாழ்வின் கடமைகள் தன்னை அப்போது
வாய்ப்பென்று எண்ணி நெஞ்சு நிமிர்த்தி நோக்கலாம்..

...எண்ணித் துணிவீர்!

இனக்கவர்ச்சியால் காமத்தின் வயப்பட்டு
அதற்கு காதல் என்று ஒரு பெயரும் சூட்டி
ஒளி படைத்த வாழ்வின் பாதை விலக்கி
இருட்டில் முள் கீறி நடக்கத்தான் வேண்டுமோ..?

...யோசனை செய்வீர்!

இத்தனையும் தாண்டி இன்றியமையாக் காதல்
எம்முடையது என்றால்..எழுவீர் இளைஞர்காள்..
நுமது கடமைகள் தமை முடிக்க தடை சொல்லா
காதலெனில் கண்ணியமும் கட்டுப்பாடும் கொள்வீர் !

...காதல் செய்வீர்..!

அக்காதல் மட்டுந்தான் காவியமாகும் ..அது
தானும் வாழும்..பிறரையும் வாழ வைக்கும்..
அ ஃதன்றி மற்றதெல்லாம் காதல் அல்ல
வெறும் கானல் நீரே அவை யாவும் என்பதுணர்வீர்!

...இன்புற்று வாழ்வீர்!

எழுதியவர் : கருணா (8-Oct-15, 9:59 am)
Tanglish : inbam kaaneer
பார்வை : 98

மேலே