ஆசைகள் எல்லாமே அழிப்பவை அல்ல

புத்தனின் பாதச் சுவடுகள்
தெரிகின்ற பாதையில்
போக முடியுமா நம் கால்கள் ..?

ஆசை அறுமின்
என்றதோர் வாக்கினை
கைக்கொளல் அரிதன்றோ
நம் எவர்க்கும்!

ஆசையின் அல்லல்கள்
அறிந்தவன் புத்தன்..
ஆசைகளின் எல்லைகள்
காணத் துடிப்பவன் மனிதன்!
..அதுதான் அவன் இயல்பு!

குரங்கை நினைக்காது மருந்து கொள்ளும்
கட்டளைக்கு குரங்கை மட்டுமே எண்ணியபடி
மயங்கியே உயிர் வாழும் ஜீவன்கள்
ஆசைப்படுவதில் குரங்காகவே மாறிடுதல் இயல்பு!

மண்ணின் மீது ..மங்கை அழகின் மீது..
பொன்னின் மீது..பொருள்களின் மீது ..
புகழின் மீது.. பொருந்தாக் காதல் மீது..
போதைகள் மீது ..போகங்கள் பலவின் மீது
பதவிகள் மீது..பட்டங்கள் மீது
எனப் பட்டியல் நீளும்
ஆசைகள் பலவுண்டு..அடைவதற்கு..
அனுபவிப்பதற்கு ..சுகித்திருப்பதற்கு..

இசைவான ஆசைகள் ..
வலிதரு ஆசைகள்
பொலிவுற ஆசைகள்
மலிவான ஆசைகள்..
அந்தரங்க ஆசைகள்..
முறையான ஆசைகள்..
முறையற்ற ஆசைகள் ..
அத்தனையும் சேர்த்துக் கட்டிய
ஆசையின் மூட்டைகள் ..
எப்போதும் நம்முள் ..ஏதோவொரு
ஆசையின் ஓசைகள்
நம்மை நச்சரித்தபடி நகர்த்திடும்
வலுவில்லா நங்கூரங்கள்

உள்ளத்தின் மூலை முடுக்குகளில்
அங்கிங்கெனாதபடி எங்கும்
நிறைந்திருக்கும் ஒட்டடைகளாய்
ஓங்கி வளரும் ஆசைகள் ..

அடர்ந்த காடு நீங்கி
ஊருக்குள் புகுந்த
மத யானைக் கூட்டமென
நசுக்கும் ஆசைகள் ..

எதுவென உற்றுக் கண்டிட..
விளங்கிடும்..
ஆசை என்பது
அத்தனை அருவருப்பான ஒன்றல்ல ..
ஆசை ..
அழிவு தராது
முறையானதாய்..
நோயற்றதாய்..
தீப் பற்றாததாய்
தீயது அல்லாததாய்
இருக்கின்ற போது..!


ஆசையோடு பார்ப்பதை நிறுத்தி
ஆசையை உற்று பார்த்திட..
தேவைகள் தெரியும்..
ஆசையா என்பது புரியும்..
அவசியங்கள் மட்டும் மிஞ்சும்!
அன்னதோர் ..
ஆசை படுமின் !
ஆசை படுமின்..!

எழுதியவர் : கருணா (9-Oct-15, 12:06 pm)
பார்வை : 243

மேலே