செல்போன் பேச்சுக்கும் மூளைப் புற்றுநோயுக்கும் உள்ள தொடர்பு

மூளைப் புற்றுநோய்

நாம் வெகுகாலமாக கண்டுவந்த பல சிட்டுக்குருவி இனங்களை தற்போது காணவில்லை. இதற்கு முக்கியக் காரணம் நாம் செல்போன்களை பயன்படுத்துவதுதான் என பரவலாக நம்பப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன்களை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதால் பல பிரச்சினைகள் வருவதாக மருத்துவ வல்லுநர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளது நமக்குத் தெரிந்த விஷயம்தான், ஆனால் அப்படியும் அதன் பயன்பாட்டினை தவிர்க்க முடியவில்லை. தற்போது செல்போன்களுக்கும் மூளைப்புற்றுநோயுக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆய்வின் மூலம் தெரிந்துள்ளது.

சுவீடன் நாட்டு மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் செல்போன் அல்லது கம்பியில்லாத தொலைபேசி மூலம் பேசுபவர்களுக்கு கொடிய வகையிலான மூளைப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. வெகுகாலமாக செல்போன்களில் பேசுபவர்களுக்கு ‘கிளியோமா’ எனப்படும் மிகவும் கொடிய மூளைப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதற்கு நேர்மாறான பல கருத்துக்களை பல செல்போன் நிறுவனங்கள் ஆதாரமாக காட்டினாலும் அதை தகர்த்தெறியும் வகையில் பல்வேறு ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. 1995 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டுவரை சுமார் ஒரு லட்சம் ஐரோப்பியர்களில் 0.005% பேருக்கு மேல் மூளைப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது, ஆனால் இதன் அளவு தற்போது 0.016% ஆக உள்ளது. அதாவது ஏறக்குறைய மூன்று மடங்கு அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.

செல்போன்களுக்கும், மூளைப் புற்றுநோயுக்கும் கிளியோமா தவிர எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் இது பற்றி நரம்பியல் வல்லுநரான டாக்டர். கேப்ரியல் சாடா கூறுகையில், “செல்போனுக்கும், மூளை புற்றுநோயுக்கும் போதுமான தொடர்புகள் கண்டுபிடிக்க பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார். மூளைப் புற்றுநோய் ஏற்பட பல காரணிகள் இருப்பதாகவும், அதற்கு செல்போன்கள் பயன்படுத்துவது மட்டும் காரணமாகிவிடாது எனவும் அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

2000 ஆம் ஆண்டு முதல் 2010 வரை மட்டும் செல்போன்களின் வளர்ச்சி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அதற்குத் தகுந்தளவிற்கு மூளைப்புற்றுநோய் அதிகரிக்கவில்லை. ஏற்கனவே செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம் குறித்து பல்வேறு விதமான கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன, தற்போது இந்தப் பிரச்சனை மிகவும் பெரிய பூதமாக கிளம்பியுள்ளது. இதனை தவிர்க்கவும் சில வழிகள் உள்ளது. செல்போன்களில் உள்ள ஒலிபெருக்கியின் உதவியுடன் எளிதாக இதைத் தவிர்க்கலாம். அல்லது ஹெட்செட் உதவியுடன் பேசலாம்.

நாம் என்னதான் செய்தாலும் நம்மால் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் நிகழ்கால உண்மை.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (10-Oct-15, 7:46 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 75

மேலே