கார்காலம் – 5

5

‘காஜு கத்லி’ என்றாள் அவள். ‘இது ஒரு நார்த் இந்தியன் ஸ்வீட், மதராஸிகளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ’ கொச்சை ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

பிளாஸ்டிக் டப்பாவில் அவள் நீட்டிய இனிப்பிலிருந்து மேலும் ஒரு துளியை விண்டு வாயினுள் போட்டுக்கொண்டு ‘இட்ஸ் வெரி நைஸ்’ என்று உபசாரமாகச் சொன்னான் அரவிந்தன். ‘இப்போதெல்லாம் சவுத் இந்தியாவில் உங்கள் ஊர் ஸ்வீட்தான் நிறைய விற்கிறது!’

‘நாங்களெல்லாம் ரொம்ப இனிப்பான மனிதர்களாக்கும்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் கலகலவென்று சிரித்தாள் அவள். ‘இன்னும் கொஞ்சம் ஸ்வீட் வேணுமா?’

‘ஐயோ, போதும்!’, கைகளிரண்டையும் முன்னே நீட்டி மறுத்தான் அரவிந்தன். ‘இதற்குமேல் சாப்பிட்டால் திகட்டிவிடும்.’

‘ஓக்கே’ என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டு முன்னே நடந்தாள் அவள். மேஜைமேலிருந்த காகிதத் துண்டில் கைகளை நன்றாகத் துடைத்துக்கொண்டு அமர்ந்தான் அரவிந்தன்.

காலையிலிருந்து இதுவரை எல்லாம் ஒழுங்காகச் சென்றுகொண்டிருக்கிறது. உங்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இதோ இந்த விநாடியில் கிழித்துப்போட்டுவிடப்போகிறேன் என்று எகிறிக் குதித்துக்கொண்டிருந்த கஸ்டமர் இன்று காலை அரவிந்தனை நேரில் பார்த்ததும் குழைந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

எல்லோருக்கும் அவரவருடைய வேலைதான் முக்கியமாக இருக்கிறது. எப்படிக் கத்தினால் எதிராளிக்கு அஸ்தியில் ஜுரம் காணும் என்று தெரிந்துகொண்டு அதன்படி கூச்சலிட்டு வேலை வாங்கிவிடுகிறார்கள்.

இத்தனைக்கும் இந்த வேலை அப்படியொன்றும் அவசரமில்லை. ஏற்கெனவே பெங்களூரில் ஓரளவு தயாராகிவிட்ட விஷயம்தான். இன்னும் இரண்டு வாரம் பொறுத்திருந்தால் எல்லாப் பூச்சிகளையும் பிடித்துக் கொன்று பிழையில்லாமல் தந்திருப்பான்.

ஆனால் அதற்கெல்லாம் நேரமில்லை. செய்தவரையில் இப்போதே கொண்டுவந்து கொட்டு என்று ஒரு வாரமாக அலறிச் சாதிக்கிறான் காசு கொடுத்தவன். நியாயப்படியான, தர்க்கரீதியிலான எந்த சமாதானங்களும் அவனிடம் செல்லுபடியாகவில்லை. ஆகவே ‘இந்தாடா மஹாராஜா’ என்று எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு கிளம்பி வந்தாகிவிட்டது. எழுதிய சாஃப்ட்வேரை ஓரளவு தட்டிக்கொட்டி நேராக்கி இங்கே உள்ள பிரதானக் கணினியில் நிறுவியாகிவிட்டது. ஆங்காங்கே சில பிழைகள் தென்பட்டாலும் குறையில்லாமல்தான் ஓடுகிறது.

என்றாலும், அரவிந்தனுக்கு இதில் முழுத் திருப்தி இல்லை. அரைத் திருப்திகூட இல்லை. ஒரு வேலையை முழுசாகச் செய்ய நேரம் கொடுக்காமல் அரை வேக்காட்டில் பரிமாறக் கேட்கிறவர்களை என்னதான் செய்யமுடியும்?

இத்தனைக்கும் நடுவே ஒரே ஒரு நிம்மதி, ஏழெட்டு நாள்களாவது ஆகும் என்று நினைத்திருந்த வேலை இன்றைக்கோ நாளைக்கோ முடிந்துவிடும்போல் தோன்றுகிறது. அதிர்ஷ்டமிருந்தால் புதன்கிழமை மதிய நேர ஃப்ளைட் எதிலாவது தொற்றிக்கொண்டு கிளம்பிவிடலாம்.

செல்விக்கு ஃபோன் செய்யலாமா என்று யோசனையாக இருந்தது அரவிந்தனுக்கு. ஆனால் இப்போது அவளிடம் இதைச் சொல்லிவிட்டு நாளைக்குப் புதிதாக வேறொரு வேலை முளைத்துவிட்டால் திரும்பிச் செல்வது தாமதமாகிவிடும். அந்த ஏமாற்றத்தை அவளுக்குத் தரவேண்டாமே!

சிறிது நேரம் இதே யோசனையில் புதுப் பேனாவால் மேஜை நுனியில் தட்டிக்கொண்டிருந்தான். பிறகு பேனாவைப் பாக்கெட்டில் செருகிக்கொண்டு மேஜையோரத்திலிருந்த தொலைபேசியை நடுவில் இழுத்துக் காதுக்குக் கொடுத்தபடி செல்பேசியில் சந்திரனின் எண்ணைத் தேடலானான்.

‘சந்திரன்’ என்ற பெயரிலேயே மொத்தம் மூன்று எண்கள் இருந்தன. எல்லாமே பத்து இலக்கங்கள் கொண்ட செல்பேசி எண்கள்தான். ஆகவே அவற்றில் எது அவனுடைய இப்போதைய எண் என்று நிச்சயமாகத் தெரியவில்லை.

மூன்றில் நடுவாக இருந்த எண்ணைத் தேர்ந்தெடுத்து ஒற்றினான் அரவிந்தன். பத்து எண்களையும் தட்டி முடித்த மறுவிநாடி ‘இந்த எண் உபயோகத்தில் இல்லை’ என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் செய்தி வந்தது. இணைப்பைத் துண்டித்துவிட்டு வேறோர் எண்ணை முயன்றான். அதுவும் தோல்வி. மூன்றாவதும் அதே கதைதான்.

பாவிப் பயல். மீண்டும் செல்பேசி எண்ணை மாற்றிவிட்டான். அல்லது, பழையபடி வெளிநாடு சென்றுவிட்டானோ என்னவோ!

சமீபத்தில் எப்போதோ ’புது வீடு வாங்கியிருக்கிறேன். அடுத்த வாரம் கிரகப்பிரவேசம்’ என்று ஈமெயில் அனுப்பினான். அதைத் தேடிப் பிடித்தால் முகவரி, ஃபோன் நம்பர் எல்லாம் கிடைத்துவிடும்.

தொலைபேசியை அதனிடத்தில் வைத்துவிட்டு, கணினியை உயிர்ப்பித்து இணையத்துள் புகுந்தான் அரவிந்தன். அவனது நிறுவனத்தின் பிரத்யேக மின்னஞ்சல் தளத்தினுள் நுழைந்து ‘சந்திரன்’ என்ற பெயரில் தேடியபோது அந்த ஈமெயில் உடனடியாகக் கிடைத்துவிட்டது.

பம்பாய்தான். ஆனால் அவனுடைய அபார்ட்மென்டின் பெயர் வாயில் நுழையும்படியாக இல்லை. ஆகவே, முகவரியைத் தவிர்த்து அங்கே கண்டிருந்த தொலைபேசி எண்ணைமட்டும் குறித்துக்கொண்டு அழைத்தான் அரவிந்தன்.

‘ஹலோ, யார் பேசறது?’, என்று சுத்தமான ஹிந்தியில் கேட்ட பெண் குரலில் இப்போது கொஞ்சமும் மலையாள வாடை இல்லை. ஆனால் கைச்சுற்றல் எந்திரத்தில் காபிப்பொடி அரைத்தாற்போன்ற அந்த லேசான கரகரப்புதான் சந்திரன் மனைவியை அவனுக்கு அடையாளம் காட்டியது. இப்போது அவளுக்குத் தன்னை நினைவிருக்குமா என்கிற தயக்கத்துடன் அறிமுகப்படுத்திக்கொண்டான்.

‘எப்படி இருக்கீங்க? சௌக்யமா?’, உற்சாகமாக விசாரித்தாள் அவள். ‘உங்க வொய்ஃப் நல்லாயிருக்காங்களா?’

அவளது விசாரிப்புகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிவிட்டு சந்திரனின் செல்பேசி எண்ணைக் கேட்டான் அரவிந்தன். ‘அவங்க இப்போ துபாய்ல இருக்காங்களே’ என்றாள் அவள். ‘அந்த நம்பர் கொடுக்கட்டுமா?’

சந்திரன் ஊரில் இல்லை என்று தெரிந்ததும் அரவிந்தனுக்கு ரொம்ப ஏமாற்றமாக இருந்தது. என்றாலும் அந்த எண்ணைக் கேட்டுக் குறித்துக்கொண்டான். ‘அவன் பேசினான்னா நான் பம்பாய் வந்திருந்தேன்னு சொல்லுங்க’ என்றான்.

‘இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க, வீட்டுக்கு வாங்களேன்’, என்றாள் அவள். ‘உங்க மனைவியும் உங்களோடதான் வந்திருக்காங்களா?’

‘இல்லைங்க. அடுத்தவாட்டி கண்டிப்பா வர்றேன்’ என்றான் அரவிந்தன். ‘நான் இன்னிக்கு நைட் ஃப்ளைட்ல ஊருக்குக் கிளம்பணும். அதனாலதான்’ என்று பிற்சேர்க்கையாகச் சேர்த்தான்.

‘சரிங்க. ஞாபகம் வெச்சிருந்து ஃபோன் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அவர்கிட்டே சொன்னா சந்தோஷப்படுவார்.’

தொலைபேசியைக் கீழே வைத்தபிறகும் சிறிது நேரத்துக்கு ஏதோ பிரமை பிடித்தவன்போல் அதையே பார்த்துக்கொண்டிருந்தான் அரவிந்தன். பசித்தது.

சந்திரன் மீண்டும் வெளிநாடு சென்றிருக்கிறான் என்கிற தகவல் அவனுக்கு ஆச்சரியமூட்டியது. ஏனெனில் சென்றமுறை அவனைச் சந்தித்தபோது ’எத்தனை குறைச்சலாக சம்பளம் வந்தாலும் பரவாயில்லை, இனிமேல் இந்தியாவில்தான்’ என்று கற்பூரம் அணைக்காத குறையாகச் சத்தியம் செய்திருந்தான்.

‘எல்லாரையும் விட்டுட்டு அங்கே போய் உட்கார்ந்திருக்கிறது-ன்னா சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்குடா’ என்பது அவனுடைய வாதமாக இருந்தது. ‘ஃபேமிலியோட அங்கே போறதுகூடக் கொஞ்சம் பரவாயில்லை. அப்பவும் நம்ம ஊர்ச் சாப்பாடு, சூழ்நிலையையெல்லாம் மிஸ் பண்ணுவோம்தான். ஆனா இப்படிக் கைவிடப்பட்டமாதிரி தனிமையா உணரமாட்டோம்.’

அரவிந்தன் இதுவரை வெளிநாடு சென்றதில்லை என்பதால் அப்போது அவன் பேசப்பேச நிச்சயமில்லாமல்தான் தலையாட்டிக்கொண்டிருந்தான். ஆனால் இப்போது உள்ளூர்ப் பயணங்களின்போதே அந்தத் தனிமையை அனுபவித்துக்கொண்டிருப்பதால் அவன் சொன்னதன் நியாயம் புரிகிறாற்போலிருக்கிறது.

ஆனால் இத்தனை பேசிவிட்டு அவன் ஏன் மீண்டும் வெளிநாடு சென்றிருக்கிறான் என்பதுதான் புரியவில்லை. ‘நம்ம ஊரோட ஒப்பிட்டா நிறைய்ய காசு வருது. அது உண்மைதான். ஆனா எல்லாமே நல்லது-ன்னு ஒரு விஷயம் இருக்கமுடியுமா என்ன? நாங்க எதையெல்லாம் இழக்கறோம்-ன்னு எங்களுக்குதானே தெரியும்?’ என்றபோது அவன் முகத்தில் தெரிந்த வேதனை உண்மைபோல்தான் தோன்றியது.

‘இதில வேடிக்கை என்னன்னா, இதெல்லாம் நாங்களே வரவழைச்சுகிட்ட விஷயம்-ங்கறதால வாய் விட்டுப் புலம்பக்கூட முடியாது. எதுனா பேசினா, காசுக்காகதானே இங்கே வந்தே? எதிர்பார்த்த அளவு காசு கிடைக்குதுதானே? அப்போ வாயைப் பொத்திகிட்டு சும்மாக் கிட-ன்னு அதட்டுவாங்க’ என்று சொல்லிச் சிரித்தான் சந்திரன். ‘உனக்கு என்னோட சின்ஸியர் அட்வைஸ்டா, தயவுசெஞ்சு பொண்டாட்டியை இங்கே விட்டுட்டு வெளிநாடு, அது, இதுன்னு கிளம்பிடாதே. இங்கே அவங்களும் அங்கே நீயும் தனித்தனியா அனுபவிக்கிற மனக்கஷ்டம் இருக்கு பாரு, மகாக் கொடுமை. ஒருவேளை உங்க பிரிவு விரிசலாகிட்டா அப்புறம் அதைச் சரி செய்ய பணத்தால முடியாது, எதாலயும் முடியாது.’

இப்படியெல்லாம் சந்திரன் நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தபோது உடல்ரீதியிலான தேவைகளின் இழப்பைதான் அவன் சொல்கிறான் என்று சந்திரன் நினைத்திருந்தான். ஆகவே அப்போது அதைப்பற்றி மேலும் கேட்பதற்குக் கொஞ்சம் கூச்சமாகவே இருந்தது அவனுக்கு.

ஆனால் அந்தப் புரிதல் பதின்பருவத்தின்போது காமத்தையும் தாண்டிய நேசம் ஒன்று இருக்கலாம் என்று ஊகிக்கக்கூட முடியாததுபோல்தான். சந்திரனின் அன்றைய பேச்சுக்கு வேறு அர்த்தங்கள் அதன்பிறகான பயணங்களின்போது மெல்ல மெல்ல புரியத்தொடங்கின.

ஊரிலிருந்து கிளம்பும்போதே மனது அழுந்திப் பிசைவதும், அதன்பிறகு சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தொலைபேசியில் அழைத்து ஏதேனும் விசாரிக்கவேண்டும் என்கிற பரபரப்பும், எந்தச் சவுகர்யம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அதைச் செல்வி எப்படிக் கையாண்டிருப்பாள் என்றே சிந்தனை ஓடுவதும், நட்சத்திர ஹோட்டல் சாப்பாட்டை வாயில் திணித்தபடி, இந்நேரம் செல்வி நேற்றைய சாம்பாரைச் சூடு பண்ணிச் சாப்பிட்டுக்கொண்டிருப்பாளா என்று குற்றவுணர்ச்சியும், வந்த வேலை முடிந்தபின் அடுத்துக் கிடைக்கும் முதல் விமானத்தில் திரும்பிவிடவேண்டும் என்கிற துடிதுடிப்பும் துணையின்மீது பாயத் துடிக்கிற மிருக இச்சைதானா? கேள்வியாகவே இருந்தது அவனுக்கு.

ஆனால் பயணம் சிறிதானாலும் பெரிதானாலும் ஒருவழியாக அது தீர்ந்து அவனை விடுவிக்கிற இரவுகள் காமத்தின்பாற்பட்டவையாக இல்லை என்பதுதான் அவனுக்குக் கிடைத்த முதல் போதிமரச்சுவடு. பயணப் பெட்டியைக் கீழே இறக்கிவைத்துவிட்டு டாக்ஸிக்காரனுக்குக் கணக்குத் தீர்த்துக்கொண்டிருக்கும்போதே மேல் மாடியிலிருந்து உற்சாகமாகக் கையசைக்கும் செல்வியின் சிரித்த முகம் தருகிற நிம்மதி அதன்பிறகு வேறெதுவும் தேவையில்லை என்றாக்கிவிடுகிறது.

சிறு பிள்ளைகள் பாதுகாப்புக்காக ஒரு துண்டையோ போர்வையையோ கையில் பற்றிக்கொண்டிருப்பதுபோல்தான் தாங்கள் ஒருவரையொருவர் இறுகப் பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது அரவிந்தனுக்கு. அந்த நெருக்கமும் கதகதப்பும்தான் எல்லாமே. அது இல்லாதபோது, பிரிவு சில நிமிடமானாலும் சரி, சில வருடமானாலும் சரி, ’இழந்தது எப்போது மீண்டும் கிடைக்கும்?’ ’ஒருவேளை கிடைக்காமலே போய்விடுமோ?’ என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாக நினைக்கத் தோன்றிவிடுகிறது.

ஒருவிதத்தில் இதுவும் சுயநலம்தான். எனது பாதுகாப்பிற்காக, நிம்மதிக்காக நான் உன்னைச் சார்ந்திருக்கிறேன். ஆனால் நீயும் அவ்வாறே எனும்போது தனிப்பட்ட தேவைகள், எதிர்பார்ப்புகள் மசங்கலாகி அந்தச் சகப்பிணைப்புதான் இருவருக்கும் தெம்பு தருவதாக இருக்கிறது.

இப்படியெல்லாம் பலவீனமாக யோசிப்பது பிற்போக்குச் சிந்தனையாகாதா என்று சிரிப்புடன் எண்ணிக்கொண்டான் அரவிந்தன். அன்றைக்குச் சந்திரன் பேசியதையெல்லாம் அப்படிதான் அவன் நினைத்தான்.

ஆனால் பிற்போக்கும் முற்போக்கும் நமது கண்கள் எந்தத் திசையில் திரும்பியிருக்கிறது என்பதைப்பொறுத்துதானே?

(தொடரும்)

***

என். சொக்கன் …

30 05 2011

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (25-Oct-15, 12:11 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 39

மேலே