கவிதைக் கொலு
கவிதைக் கொலு
===============
இறைவழி பாடெல்லாம் மானுடம் நலங்காண
வேண்டுதல் விரதமெல்லாம் உடல்நலமே பேண
செவிபிடித்ததோப்புக் கரணத்தில் புத்துணர்ச்சி
நவராத்திரி விழாகூட்டும் உடல்புரத வளர்ச்சி ..!!
புரட்டாசி திங்களதில் தேவைஅதி புரதசக்தி
நவராத்திரி கொலுவைப்பு தினம் பயிறுன்னும் யுக்தி
ஆன்றோர்கள் வகுத்திட்ட காலநேர வழிபாடு
காரணங்கள் ஆயிரந்தான் கடைபிடித்து கொண்டாடு..!!
மண்பொம்மை மரப்பொம்மை கொலுப்படியில் அழகு
மண்பெருமை மரப் பெருமை கவியெழுதி பழகு
எழுதியதை கொலுவிட்டு எல்லோர் அறிய பாடு
வளமான கவிதையில் தமிழோடு விளையாடு..!!
திருக்குறள் தேவாரம் வேதங்கள் யாவும்
வாழ்வினை மேம்படுத்தும் தெய்வங்களாகும்
தேவரும் முனிவரும் நமக்களித்த அமிழ்து - கொலு
மேற்படியில் வைத்தே போற்றுவாய் தொழுது...!!
இலக்கிய இலக்கண படிகளை கடந்து
மரபினை உடைத்து வீரியத்தில் புதுக் கவிதை - அதில்
நாட்டின் அவலங்களை தூற்றியே பாடு
நாடு முன்னேற கவிதையில் வழி தேடு...!!
மேகத்தை சேர்த்தெடுத்து பஞ்சணைகள் போடு
கார்மேக பஞ்சணையில் ஓய்ந்திருக்க கண் மூடு
நிலவினில் ஊஞ்சல் கட்டி விடியும் வரை ஆடு
இளங்கதிரவன் கதிர் பிடித்து இறங்குவாய் மண் மீது...!!
கற்பனை உலகினில் களித்தது போதும்
மண்ணுலகம் பயனுற மாசிலா கவிதைகள் தாரும்
பண்பட்ட சொல்லினில் கொலு நிறுத்து கவிதை - அதுவே
நாடும் வளமுற கவிஞனே நீ விதைக்கும் நல்விதை..!!
(குறிப்பு: நேற்று (24-10-2015) "இலக்கிய சோலை" மாத இதழ் நடத்திய
கவி அரங்கில் முதல் பரிசினை வென்ற கவிதை. தலைப்பினை அளித்த
பத்திரிக்கைக்கு எனது நன்றிகள். தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும்
எனது நன்றிகள். தொடர்ந்து முதல் பரிசினை வென்று கொண்டிருப்பதில்
கன்றுகுட்டியாய் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது)