போக வேண்டாம்
அப்பா..இன்று உங்களோடு நானும் வருகிறேன்..
விண்கலத்தில்..உங்கள் விண்வெளிப் பயணத்தில்..
முரண்டு பிடித்தான்..மகன்..
பொய்கள் சொல்வது வழக்கத்தில் இல்லாத
அவருக்கு அவனது ஆசை பிடித்திருந்தது..
எதிர்ப்பட்ட சில கோள்கள் , அவற்றில் எதுவும்
பிரத்தியேகமாய் தெரியாத நிலையில்
சிறுவனை ஈர்த்தது ஒரு கிரகம்..
அந்த கிரகத்தின் அளவில் இரண்டு சதவீதம் அளவுக்கு
நீரும், அதனை சுற்றி அமில மழையும் தெரிந்திட..
அப்பா..அங்கு இறங்குவோமா என்றான் சிறுவன்..
வேண்டாம் மகனே ..
நானும் உன் அம்மாவும்
எங்கள் குடும்ப நண்பர்கள்,
இணைய தள நண்பர்கள் சிலரும்
அங்கிருந்துதான் நமது கிரகத்துக்கு வந்தோம்..
நூறு ஆண்டுகளுக்கு முன்..
அங்கு ஒன்றும் இல்லை..
அதன் பேர் பூமி என்றார் அப்பா ..!
விண்கலம் பறந்து கொண்டிருந்ததை
..ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது..
தன்னைத்தானே
96 மணி நேரத்திற்கு ஒரு முறை சுற்றிக் கொண்டு
சூரியனை சுற்றி வர 1460 நாட்கள் எடுத்துக் கொண்டிருப்பதாக
மாறியிருந்த பூமி !
இது கவிதையோ கதையோ அல்ல..
என்பதை புரிந்து கொண்ட சிறுவன்
வேற்று கிரகத்து நூல் என்று
அவன் அப்பா கொடுத்திருந்த
"தொலைந்து போன வானவில்"
என்ற புத்தகத்தினுள்
ஆழ்ந்தான்!
அவன் பக்கத்தில்அவன் படித்து முடித்த
"மழையும் மழலையும் ",
"திசை கடக்கும் சிறகுகள்"
புத்தகங்கள் ..திறந்தபடி!