காத்திருக்கும் காதல்

நறுமுகைத் தொட்ட நறுமணத் தென்றல்
குறுநகை சிந்து மதரம் – சிறுமழை
போன்று சிலிர்த்திடச் செய்ய மனதினில்
தோன்றிடும் வானவில் நூறு.

விண்ணகம் மின்னிடும் வெண்மதி பொன்னெழில்
கண்வழி சிந்திடும் மின்மினி – பெண்ணெழில்,
மின்னலை விஞ்சிடும் மெல்லிடை யோடொரு
கன்னலின் ஊற்றாய் சுரந்து.

சிற்றிடைக் காட்டின் சிறுகுகைக் கொண்டுள
அற்புதத் தேனடை முற்றிலும்கைப் - பற்றிடும்
கற்பனை யூற்றது வற்றிடா தூர்கையில்
சிற்றெறும் பாகும் மனது.

கற்சிலை யொத்தொரு காண்தக ஓவிய
வெற்றிலை மீதினிற் வெண்பனி – முற்றுகை
இட்டிட கொட்டிட ஈற்றிடும் இன்பத்தைக்
கட்டிடத் தோன்றும் வயசு.

முற்றிய மோக முடிவிலா ராகமோ
நெற்றியும் குங்குமச் சங்கமம் – பெற்றதும்
மெட்டி யொலித்து நிலவு அழைத்திடக்
கட்டிக்கொள் என்கிறதே காண்!

கடலது வற்றிக் கருவாடு தின்ன
மடல்விடும் எண்ணம் மறைத்து – உடலால்
மனத்தால் ஒருங்கிணைந்துக் காத்திருக்கக் காதல்
இனத்துக்கு உண்டோ இருப்பு?

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-Oct-15, 3:53 am)
பார்வை : 357

மேலே